Friday, February 09, 2007

295. சொன்னதும் சொல்லாமல் விட்டதும் - 1

1 ) தி.க. தலைவர் வீரமணி

சொன்னது :
ஆனால் தி மு க அரசில் மூத்த அமைச்சராக இருக்கிற துரை முருகன் " முன்கூட்டியே எதையும் தெரிந்து கொள்கிற சக்தி படைத்தவர் பாபா .தன் சக்தியால் மோதிரம் வரவழைத்து எனக்கு தந்தார் என்பதுதான் நகைப்புக்கு இடம் தரக் கூடியது.மேஜிக் காட்சியை கடவுளின் அனுக்கிரகம் என்று சொல்வதை கலைஞரின் சர்க்காரில் அமைச்சராக இருக்கும் ஒருவரே பாராட்டுவது வேதனையாக இருக்கிறது

சொல்லாமல் விட்டது :
இதுக்கு பதிலா இவரும் பாபா காலிலேயே விழுந்திருக்கலாம்..வேட்டி தடுக்கி விழுந்துட்டாருன்னு சொல்லியாவது சமாளிச்சிருப்போம்

2 ) தமிழக அமைச்சர் துரை முருகன்

சொன்னது :
பாபா தனது சக்தியால் மோதிரம் வர வழைத்து எனக்கும் தயாநிதி மாறனுக்கும் மட்டும் தந்தார்

சொல்லாமல் விட்டது :
நல்ல வேளை...தயாநிதி மாறனுக்கும் தந்துட்டாரு..நா தனியா மாட்டியிருந்தா இதை வச்சே நம்ம அமைச்சர் பதவியை காலி பண்ணினாலும் பண்ணிருவாங்க.


3 ) முதலமைச்சர் கருணாநிதி

சொன்னது :
வானத்தை கிழித்து பொற்காசுகளை வாரி கொட்டிக் கொடுத்தாலும் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

சொல்லாமல் விட்டது :
எந்தெந்தக் கொள்கைகளை அப்படீன்னு யாரும் கேக்காத வரைக்கும் சரி.


4 ) பாக் அதிபர் முஷாரப்

சொன்னது:
காஷ்மீர் பிரச்சினைக்கு வன்முறை மூலமே தீர்வு காண முடியும் என நம்புகிரவர்களை எங்களுடன் சேர்க்க மாட்டோம்

சொல்லாமல் விட்டது :
அவங்க கையில துப்பாக்கியும், வெடிகுண்டும் குடுத்து இந்தியாவுக்குள்ள அனுப்பிருவோம்


இன்னும் இது போல நிறைய இருக்கு. Later :)

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 295 ***

Wednesday, February 07, 2007

294. வரம் தந்த பாபாவுக்கு பதமான லாலி !

தலைப்பு என்னுடையது. மேட்டர் கி.அ.அ. அனானியுடையது !

அனானி நண்பர் சூப்பர் ·பார்மில் இருக்கிறார் போல் உள்ளது :) இன்னும் 2 மேட்டர்களை மெயிலில் அனுப்பித் தாக்கியுள்ளார் ;) அவற்றைப் பிறகு பதிகிறேன்.

எப்போதும் போல், இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு கி.அ.அ.அ. அவர்களையே பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் !!! என்சாய் !

******************
சப்பை மேட்டருக்கு இத்தனை சப்பைக்கட்டா ?

அல்லாரும் பேசி முடுச்சுட்டாங்க ..அதனால நாம ஆரம்பிக்கிறோம் அதாங்க முதல்வர் மனைவி தயாளு அம்மாள் சாய்பாபா கால்ல விழுந்த மேட்டரு.

எல்லாத்துக்கும் மொதல்ல ஒண்ணு சொல்லிப்போடணும் .....இதுல தப்பொண்ணும் இல்லீங்க...அது அவங்க இஷ்டம்

ஆனா வயசான காலத்துல ஏன் முதல்வர் இப்படி சப்பை கட்டு கட்டிக்கிட்டு இருக்காரு அப்படீன்னு ஒரு கேள்வியும் வருதுங்க

சப்பை கட்டு பார்ட்----1

அவர் நமக்கு நாமே திட்டத்தில் குடுக்குற கேள்வி பதில் அறிக்கையில் சொல்ரத கேளுங்க

" ஏன் மனைவி பக்தி மேலிட்டு காலில் விழவில்லை.வயதில் பெரியவர்கள் வந்தால் அவர்களை வணங்குவது என்ற மரியாதை காட்டும் மரபுதானே தவிர வேறில்லை "

அட்ரா சக்கைன்னானாம்...அப்பிடியே அவரோட இளவல் திராவிட தலைவர் வீரமணி சொல்லியிருக்கிறதை கேளுங்க

" தயாளு அம்மையார் பாபாவிடம் ஆசி வாங்கியதிலும் எங்களுக்கு உடன்பாடில்லை.ஏனென்றால் காலில் விழும் கலாசாரத்தை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. "

பகுத்தறிவு விஷயமா வீரமணி சொல்றதை முதல்வர் ஏன் ஏத்துக்கணும் அல்லது கேட்கணும் அப்படீன்னு கேள்வி வர்ரது ஞாயம்தான்.

அதுக்கும் முதல்வரே "தெலுங்கு-கங்கை திட்டத்திற்காக ரூ.200 கோடி பாபா செலவழித்துள்ளார்.அதற்கு நன்றி சொல்லும் வகையில் நாங்கு முதல்வர்கள் பங்கேற்கும் விழாவில் நான் கலந்தி கொள்ளட்டுமா என்று வீரமணியிடம் கேட்டுக் கொண்டுதான் கலந்து கொண்டேன் " அப்படின்னு வீரமணியை " பகுத்தறிவு ரெபரன்ஸ் ஆப் தி வர்ல்ட்" ரேன்சுக்கு வச்சு பேசுனதுனால கேட்டோம். அம்புட்டுதான்

சப்பை கட்டு பார்ட்---2

மேலும் முதல்வர் சொன்னது

" 1948 ஆம் ஆண்டு எனக்கும் தயாளுவுக்கும் திருமணம் நடக்கும் போதே "திருமாகாளம்" கிராமத்தில் அந்தக் குடும்பத்தினர் தீவிர திராவிட கழகத்தில் இருந்தனர்.1938ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்றவர்தான் தயாளுவின் பாட்டி ராஜாமணியம்மாள்"

இதுலேர்ந்து என்ன சொல்ல வர்ராரு? அவங்க குடும்பமே திராவிட பாரம்பரியம் உள்ளது..அதுனால தயாளு அம்மாளும் அந்த பாரம்பரியம்தான் அதுனால அவங்க காலில் விழுந்தது பக்தியினால் இல்லை... மரியாதை நிமித்தமே அப்படீன்னா ?

ஆனா வீரமணி அய்யா சொல்ராருங்க " இருந்தாலும் தயாளு அம்மாள் கடவுள் நம்பிக்கையாளர்" ன்னுட்டு.

அட...அவுங்க பக்தியாளரா இல்லை பகுத்தறிவாளரா அல்லது பக்தி மிகுந்த பகுத்தறிவாளரா அப்படீன்னு சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க.

ஏன்னா இதை வச்சு தப்பு & தப்பில்லைன்னு "ஜோ"ரா "ஜல்லியடிச்சு "விடாது" க "லக்கி"ய கூட்டத்துக்கு கொஞ்சம் தெளிவு வருமுல்ல.
*******************

*** 294 ***

அரசியல் கூத்துகள் - 2

சமீப காலத்தில் வாசித்த செய்திகளைச் சார்ந்த சில கேலிக்கூத்துகள், உங்கள் பார்வைக்கு :)

'ராமர் சேது' கூத்து:பிஜேபி மற்றும் அதிமுக, சேது சமுத்திரம் கப்பல் பாதைத் திட்டத்தை, மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றன. 'ராமர் கேது' என்றழைக்கப்படும், இராமரின் வானர சேனை கட்டிய புராதன பாலத்தின் தடங்கள் அழிந்து விடும் அபாயம் இருப்பதாகவும், அதை அழிப்பதை நாடு தழுவிய பிரச்சினை ஆக்கப் போவதாகவும் பிஜேபி கூறி வருகின்ற நிலையில், மத்திய அமைச்சர் பாலு, இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் தேசிய நலனுக்கு எதிரானவர்கள் என்று கூறியிருப்பது நல்ல நகைச்சுவை :)

அவர் சார்ந்திருக்கும் திராவிட இயக்கத்தின் அந்நாள் தலைமை, மகாத்மா காந்தி 1942-இல் வெள்ளையருக்கு எதிராக 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தைத் தொடங்கியபோது, அயல்நாட்டவரின் ஆட்சிக்கு ஆதரவாக தீர்மானத்தை நிறைவேற்றியது ! தேசிய நலனில் என்னே ஓர் அக்கறை !!!

'பாலாற்று அணை' கூத்து:இப்பிரச்சினையில் ஆளும் திமுகவின் 'வழவழா கொழகொழா' அணுகுமுறையினால், அக்கட்சி அதன் தோழமைக் கட்சிகளாலேயே (பாமக, இடதுசாரி, விசி) தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. பாமகவின் தலைவர் ஜிகே மணி அவர்கள் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில், அவரு,ம் அவரது கட்சியினரும் அணை கட்டவிருக்கும் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டபோது, அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கி விட்டதை ஆந்திர அரசு தரப்பே ஒப்புக் கொண்டதாகக் கூறியுள்ளார் ! ஆனால், அமைச்சர் துரைமுருகனோ சட்டமன்றத்தில், அப்படியொன்றும் இல்லை என்கிறார் !

ஆந்திராவில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி ! அதனால் தான் என்னவோ, தமிழக அரசு பேச்சை விடுத்து செயலில் இறங்குவதாகத் தெரியவில்லை. மாநிலத்தில் ஆட்சியையும், மத்திய அமைச்சரவையில் பங்கையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் இல்லையா ?

'மாநகராட்சி மறுதேர்தல்' கூத்து:சென்னை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடுவது குறித்து, எதிர்க்கட்சியான அதிமுகவும், மதிமுகவும் குழப்பத்தில் உள்ளன. மறுதேர்தலை அக்கட்சிகள் புறக்கணிக்கும் பட்சத்தில், கேப்டனின் தேமுதிகவுக்கு வாய்ப்புகள் ஓரளவு பிரகாசமாகும்.

மறு தேர்தலில் பெருவெற்றி கிட்டினால் மட்டுமே, சென்ற முறை தேர்தலில் பெருவாரியாக முறைகேடு செய்து ஜெயிக்கவில்லை என்பதை, திமுக பொதுமக்களுக்கு நிரூபிக்க முடியும் என்றும், இத்தேர்தலுக்கு மீண்டும் பணம் செலவழிக்க வேண்டுமே என்றும், திமுகவின் கூட்டணிக்கு இரு பெருங்கவலைகள் உள்ளன.

அதே நேரம், அதிமுக தேர்தலை புறக்கணிப்பதில் கொண்டாட்டமே ! சமீபத்தில், சென்னை உயர்நீதி மன்றம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாநில தேர்தல் ஆணையர் பதவியில் தொடர்வதை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுவை ஏற்று, மாநில தேர்தல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாலாற்றில் புது அணை கட்டுவதற்கான அறிவிப்பை மாநகராட்சித் தேர்தலுக்குப் பின் வெளியிடுமாறு ஆந்திர அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது !!!

எ.அ.பாலா

பி.கு: இன்னும் இரண்டு கூத்துகளைப் பற்றி (காவிரி ஆணையத்தின் தீர்ப்பு மற்றும் அமைச்சர் ஆற்காட்டாரின் உயர்நீதிமன்றத்தின் மீதான கடும் விமர்சனம்) நிறைய எழுதலாம் தான் ! இப்ப ரொம்ப அயற்சியாக இருப்பதால் அப்புறம் பார்க்கலாம் ! அதான் தினம், ஒரு கூத்து பற்றிய செய்தி வந்து கொண்டு தானே இருக்கிறது ;-)

*** 293 ***

Sunday, February 04, 2007

புஷ்பவனம் ஐயா - பர்ஸண்டேஜ் கதை

கொஞ்ச நாள் பிரேக் விட்டிருந்த கி.அ.அ. (கிராமத்து அரட்டை அரசியல்) அனானி சமீபத்தில் ஒரு மேட்டரை மெயிலில் அனுப்பி இவ்வாறு எழுதியிருந்தார்:
*********************
எ.அ.பாலா,

நலம் தானே. சமீபத்தில் நண்பர் ஒருவர் வலைப்பதிவில் கதை ஒன்றை வாசித்தேன். அட, இவர் கதை கூட எழுதுவாரா என்று ஆச்சரியம். நல்ல கருத்துள்ள கதை, நம்மளும் ஒரு கதையை எழுதலாமேன்னு ஒரு உந்துதலைத் தந்த கதை அது ;-) படிச்சுப் பார்த்துட்டு, உங்களுக்கு விருப்பமிருந்தா பதிவாப் போடுங்க.

குறிப்பிட்ட பதிவுக்குப் போய் நான் எழுதுனதை பின்னூட்டமா போடலாமுன்னா, அங்க சுத்திக்கிட்டு இருக்கற பின்னூட்ட ஜால்ராக்கள் போடற கூச்சலில், நம்ம குரல் எடுபடுமான்னு ஒரு சந்தேகம், அம்புடுதேன் :)

கி.அ.அ.அனானி

பி.கு: எந்தப் பதிவை நான் குறிப்பிடுகிறேன் என்று முதலில் கண்டுபிடிப்பவரின் சொந்தக்காரப் புள்ளைக்கு பாலா 'பேமண்ட்' சீட் ஒன்றை தள்ளுபடி ரேட்டில் வாங்கித் தருவார் ;-)
***************************
கருத்துச் சுதந்திரத்தின் மேல் எனக்கிருக்கு அசைக்க முடியாத நம்பிக்கையாலும், "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பரந்த நோக்கிலும் கி.அ.அ.அனானியின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன் :)

இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு கி.அ.அ.அ. அவர்களையே பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் !!! கி.அ.அ.அ கதை பதிவாக கீழே !

எ.அ.பாலா

**********************

"அப்பா...நான் நல்ல மார்க் எடுத்து பாஸாயிட்டம்பா...இஞ்சினீரிங் காலேசுல சீட்டு, ஸ்காலர்ஷிப்பு அல்லாம் கெடைச்சுரும்பா..நான்தாம்பா ஸ்கூல் பஸ்ட்டு " என்றபடி வந்தான் சின்ராசு

மென்று கொண்டிருந்த வெற்றிலையை இடப்பக்கம் திரும்பி புளிச்சென்று துப்பி விட்டு " சரி..அதுலென்ன..ஒனக்குதான் பாஸ் பண்ணிப் போட்டாலே சீட்டு வாங்கிருவமுல்ல " என்று வெறுமனே சொன்னார், கூடத்தில் இருந்த பெரிய தேக்கு மர ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த பஞ்சாயத்து போர்டு பிரசிடென்டு புஷ்பவனம் ஐயா.

அப்பாவிடம் சிறிதளவேனும் பாராட்டை எதிர்பார்த்து வந்த சின்ராசுவின் முகம் கருத்தது.

தலையைக் குனிந்து கொண்டே வீட்டினுள் சென்றான்

பின்னால் கணக்கு ஆவுடையா பிள்ளை " என்னங்க பள்ளிக்கூடத்திலயே சாஸ்தி மார்க் தம்பிதான் வாங்கியிருக்குதாமுல்ல " என்று சொல்வது கேட்டதும் அப்பா என்ன பதில் சொல்லப் போகிறார் என்று கேட்கும் ஆவலில் சின்ராசுவின் நடை மட்டுப் பட்டது.

"மார்க் கெடக்குது களுதை...அதை வச்சுக்கிட்டு நாக்கா வளிக்க....அவனவன் 95 பர்ஸன்டு மார்க் வாங்கிட்டு இஞ்சினீரிங் சீட்டு கெடக்காம ...பேமண்டு சீட்டு வாங்க காசுமில்லாம வக்குமில்லாம பொளப்புக்காக கல்யாணம் கருமாதின்னு சடங்கு செஞ்சு வச்சு வயத்தை களுவிட்டிருக்கானுங்க...சுத்துப்பக்கத்துலே பார்க்குரீங்கல்ல...ஏன்..ஒம்ம பையன் கூடத்தான் போன வருசம் 96 பர்சண்டு மார்க்கு வாங்கி இதே ஸ்கூலுல மொதலாவதா வந்து மெடலு வாங்கினான்...இப்ப என்ன கிளிக்காங்குறேன்...மேல காலேஜு சீட்டு கெடைக்காம தீப்பட்டி ஆபிஸ¤ல 500 ரூவா சம்பளத்துக்கு கணக்குதான எளுதிக்கிட்டு இருக்கான்..டெய்லி தீப்பட்டி ஆபீஸ¤க்கு கணக்கெளுதப் போகும் போது வாங்குன மெடலை களுத்துல மாட்டிக்கிட்டு போறானா ? என்று இதழோரம் நையாண்டிப் புன்னகையுடன் கேட்டார்.

" இஞ்சினியரிங் காலேஜுல சேர இப்பத் தேவை "இந்த" பர்ஸண்டேஜும்..மெடலும் இல்ல... ..அதைப் புரிஞ்சுக்கோரும்.."என்றார் மீண்டும் புகையிலையை சாவகாசமாக வாயிலிட்டு அதக்கிய படி.

கேட்டுக் கொண்டிருந்த ஆவுடையா பிள்ளை மெளனமாய் தலையை குனிந்து கணக்கெழுதத் தொடங்கினார்.

*** 292 ***

Saturday, February 03, 2007

வைணவம் சார்ந்த எனது பதிவுகள் - A ready reckoner

ஆழ்வார்கள், திவ்யப்பிரபந்தம் மற்றும் வைணவ திவ்யதேசங்கள் பற்றி நான் இதுவரை எழுதியுள்ள பதிவுகளின் உரல்களை, அப்பதிவுகளை வாசிக்க விருப்பமுள்ள நண்பர்களின் வசதிக்காக, கீழே தொகுத்து அளித்திருக்கிறேன். இனி மேல் (அவ்வப்பொழுது) எழுதவிருக்கும், வைணவம் குறித்த, பதிவுகளின் சுட்டிகளையும் இப்பதிவில் சேர்க்கலாம் என்று உத்தேசம்.

திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிப் பாசுரங்கள் - 2

திருப்பாவை விளக்கப் பதிவுகளின் உரல்கள்:

http://balaji_ammu.blogspot.com/2007/01/tpv30-ii.html

http://balaji_ammu.blogspot.com/2007/01/tpv30.html

http://balaji_ammu.blogspot.com/2007/01/tpv29.html

http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv28.html

http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv27.html

http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv26.html

http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv25.html

http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv24.html

http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv23.html

http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv16.html

http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv6.html

http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv5.html

திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிப் பாசுரங்கள் - 1

திருக்கூடலூர் திவ்யதேசம்

நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்கள் - 1

திருக்கண்டியூர் திவ்யதேசம்

திருப்பேர் நகர் திவ்யதேசம்

திருவன்பில் திவ்யதேசம்

திருவெள்ளறை திவ்யதேசம்

நம்மாழ்வார்

திருக்கரம்பனூர் திவ்யதேசம்

திருப்பாணாழ்வார்

திருக்கோழி திவ்யதேசம்

ஆழ்வார் பாசுரங்களில் பக்திரஸம் - 3

ஆழ்வார் பாசுரங்களில் பக்திரஸம் - 2

ஆழ்வார் பாசுரங்களில் பக்திரஸம் - பொருளுரை

ஆழ்வார் பாசுரங்களில் பக்திரஸம்

மழைப்பாசுரங்கள்

என்றென்றும் அன்புடன்
பாலா

***291***

பெரிய திருமொழிப் பாசுரங்கள் தொகுப்பு - PTM2

Photobucket - Video and Image Hosting

உலவுதிரையும் குலவரையும்* ஊழிமுதலா எண்திக்கும்*
நிலவும்சுடரும் இருளுமாய் நின்றான்* வென்றிவிறலாழி வலவன்*
வானோர் தம்பெருமான்* மருவாவரக்கர்க்கு எஞ்ஞான்றும் சலவன்*
சலம்சூழ்ந்தழகாய* சாளக்கிராமம் அடைநெஞ்சே. 1.5.3

திருமங்கையாழ்வார் 'சகலமும் பரந்தாமனே' என்கிறார் இப்பாசுரத்தில் !

அலைகடல்களிலும், பெருமலைகளிலும், காலத்திலும், எண்திசைகளிலும், நிலவிலும், சூரியனிலும்,
இருளிலும், இவ்வாறாக எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக உறைந்து நிற்பவனும், பகைவரை வெற்றி கொள்ள தன் திருக்கைகளில் திருச்சக்கரத்தையும், சங்கையும் ஏந்தியவனும், வானவர்களின் தலைவனான தேவாதி தேவனும், கொடுஞ்செயல் புரியும் அசுரர்க்கு எப்போதும் எதிரியாக இருப்பவனும் ஆன பரந்தாமன் புண்ணிய நீர் சூழ்ந்த, அழகான சாளக்கிராமத்தில் எழுந்தருளி உள்ளான் ! அவ்விடம் அடைந்து அப்பரமனை பற்றிடு என் நெஞ்சமே !

****************************
சூதினைப்பெருக்கிக் களவினைத் துணிந்து* சுரிகுழல் மடந்தையர்திறத்து*
காதலேமிகுத்துக்கண்டவா* திரிந்ததொண்டனேன் நமன்தமர்செய்யும்*
வேதனைக்கு ஒடுங்கிநடுங்கினேன்* வேலைவெண்திரை அலமரக்கடைந்த நாதனே*
வந்துஉன் திருவடியடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய். 1.6.3

தனது கடந்த கால வாழ்க்கையை எண்ணி மிக்க துயரம் கொள்கிறார், இப்பாசுரத்தில் !

ஆகாத தந்திரங்களைக் கைகொண்டு, களவுத் தொழில் செய்து, அழகிய கூந்தல் கொண்ட பெண்டிர் பின் (சிற்றின்பம் வேண்டி) அலைந்து, பயனற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த நான், செய்த தீவினைகளின் பலனாக, நரகத்தில் யமதூதர்கள் எனக்குச் செய்யவிருக்கும் கொடிய வேதனைகளை எண்ணி ஒடுங்கி நடுங்கினேன் !

திருப்பாற்கடல் கடைந்த எம்பெருமானே, நைமிசாரண்யத்தில் எழுந்தருளியிருக்கும் என் தந்தையே, உன் திருவடிகளே காப்பு என்று உன்னைச் சரணடைந்தேனே !

************************
பள்ளியாவது பாற்கடல்அரங்கம்* இரங்கவன்பேய்முலை*
பிள்ளையாய்உயிருண்ட எந்தை* பிரானவன் பெருகுமிடம்*
வெள்ளியான் கரியான்* மணிநிறவண்ணன் என்றெண்ணி*
நாடொறும் தெள்ளியார்வணங்கும்மலை* திருவேங்கடம் அடைநெஞ்சமே. 1.8.2

இப்பாசுரத்தில் திருமங்கை மன்னனின் பக்திப் பேருவகை பிரவாகமாய் வெளிப்பட்டுள்ளது !

திருவரங்கத்திலும் திருப்பாற்கடலிலும் யோக நித்திரையில் ஆழ்ந்திருப்பவனும், ஆயர்பாடியில் சிறுபிள்ளையாக இருந்த காலத்தில், தன்னைக் கொல்ல கம்சன் அனுப்பிய பூதனை என்ற அரக்கியின் நச்சு முலையில் பால் குடித்து அவளது உயிர் குடித்தவனும் ஆன எம்பெருமான் திருவேங்கடத்தில் வியாபித்து நிற்கிறான் ! "பிரகாசமானவனே, அழகான கருமேனி கொண்டவனே, நீலமணி நிறத்துடைய அழகனே" என்று ஞானத்தெளிவு பெற்ற அடியவர், நாளெல்லாம போற்றி வணங்கும் அவ்வெம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருவேங்கடமலை அடைந்து அவன் திருவடிகளை பற்றிடு என் நெஞ்சமே !

************************
குலந்தானெத்தனையும்* பிறந்தே இறந்தெய்த்தொழிந்தேன்*
நலந்தான்ஒன்றுமிலேன்* நல்லதோர்அறம்செய்துமிலேன்*
நிலம்தோய் நீள்முகில்சேர்* நெறியார் திருவேங்கடவா.*
அலந்தேன் வந்தடைந்தேன்* அடியேனை ஆட்கொண்டருளே. 1.9.4

இனி ஓர் பிறப்பு இல்லாவண்ணம் தன்னை ஆட்கொள்ளுமாறு பரமனை வேண்டுகிறார், இப்பாசுரத்தில் !

இப்பிறப்புக்கு முன், மனிதன், விலங்கு, பறவை என்று பலவகையான பிறப்புகள் நான் எடுத்து, வாழ்ந்து மரித்திருக்கிறேன். அப்பிறப்புகளிலெல்லாம் நல்வினைகள் ஏதும் நான் செய்ததில்லை ! பெரிய கருமேகங்கள் நிலத்தில் தவழ்ந்து ஓய்வெடுக்கும் திருவேங்கட மலையில் வாழும் பிரானே !

பல துயரங்களையும் வேதனைகளையும் அனுபவித்து, அலைந்து திரிந்து, நின்னையே கதியென்று உன் திருவடி நாடி வந்துள்ளேன், என்னை ஆட்கொண்டு அருள்வாயாக !

***********************
பற்றேல் ஒன்றுமிலேன்* பாவமேசெய்து பாவியானேன்*
மற்றேல் ஒன்றரியேன்* மாயனே. எங்கள்மாதவனே.*
கல்தேன் பாய்ந்தொழுகும்* கமலச்சுனை வேங்கடவா.,
அற்றேன் வந்தடைந்தேன்* அடியேனைஆட்கொண்டருளே. 1.9.9

பரந்தாமனை விட்டால், தனக்கு வேறு கதியில்லை என்கிறார் , இப்பாசுரத்தில் !

உன் திருவடியையைப் பற்றுவது விடுத்து எனக்கு வேறு மார்க்கமில்லை ! நான் பாவம் மேல் பாவம் பல செய்து பாவியானவன். உன்னைத் தவிர புகல் மற்றொன்று நான் அறியேன் ! உணர்வதற்கரிய மாயவனே ! திருமகளின் மணாளனான எங்கள் மாதவனே !

மலையின் உயரங்களிலிருந்து உருண்டோடி வரும் தேன் கலந்ததால் சுவை கூடிய நீர் நிரம்பிய, தாமரை பூத்த தடாகங்கள் நிறைந்த திருவேங்கடமலை வாழ் எம்பெருமானே ! உன் திருவடிகள் மட்டுமே காப்பு என்று உன்னிடம் சரணடைந்த என்னை ஏற்று எனக்கருள்வாயாக !
*******************************************

1064@
திங்களப்பு வானெரிகாலாகி* திசைமுகனார்*
தங்களப்பன் சாமியப்பன்* பாகத்திருந்த *
வண்டுண் தொங்கலப்பு நீண்முடியான்* சூழ்கழல் சூடநின்ற*
எங்களப்பன் எம்பெருமான்* எவ்வுள் கிடந்தானே* 2.2.7

சந்திரன், பஞ்சபூதங்கள் ஆகியவற்றில் அந்தர்யாமியாகத் திகழ்பவனும், பிரம்மனின் தந்தையும், சாமவேத நாயகனும் ஆவான் எங்கள் எம்பெருமான் ! த்ரிவிக்ரமனாக, தன் திருவடிகளால் எம்பெருமான் அண்டத்தை அளந்த காலத்தில், அவனது திருவடிகளில் பிரம்மன் இட்ட நீரானது, புனித கங்கை நதியாக பெருக்கெடுக்க, சிவபெருமான் அவளை (கங்கை) தன் சடைமுடியில் ஏற்றுக் கொண்டான் ! அப்பேர்ப்பட்ட என் தந்தை, ஒப்பில்லா என் பெருமான், திருவள்ளூரில் சயன திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறான் !

****************************
1065@
முனிவன் மூர்த்தி மூவராகி* வேதம் விரித்துரைத்த புனிதன்*
பூவை வண்ணன் அண்ணல்* புண்ணியன் விண்ணவர்கோன்*
தனியன் சேயன் தானொருவனாகிலும்* தன்னடியார்க்கு இனியன் *
எந்தை எம்பெருமான்* எவ்வுள் கிடந்தானே. 2.2.8

இப்பாசுரத்தில், திருமங்கை மன்னன், பக்திப் பேருவகையில், பெருமாளை எப்படி வியந்து போற்றிப் பாடியிருக்கிறார் என்று பாருங்கள் !!! இதற்கு பொருள் என்று ஒன்றை எழுதுவது தேவையில்லை என்றாலும், ஏதோ எழுதியிருக்கிறேன் !

பிரம்மனையும், சிவனையும் படைத்து மூவர் ஆனவனும், வேதத்தின் சாரத்தை பகவத்கீதையாக உபதேசித்த ஸ்ரீகிருஷ்ணனும், காயாமலர் நிறங்கொண்ட என் அண்ணலும், தர்மத்தின் நாயகனும், தேவர்களுக்கெல்லாம் தலைவனும், விளக்கத்திற்கு அப்பாற்பட்டவனும், உணர்வதற்கரிய பரம்பொருளும், ஒப்பாரில் சுவாமியும், ஆக இருந்தும், தன் அடியார்களுக்கு இனியவனும், எளியவனும் ஆன என்னப்பன், எம்பெருமான், திருவள்ளூரில் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் ஆட்சி புரிகிறான் !

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 290 ***

Sunday, January 28, 2007

289. திருக்குறுங்குடி கிராமமும் 'கைசிக' நாட்டிய நாடகமும்

இரு வாரங்களுக்கு முன் திருவல்லிக்கேணியில் உள்ள வானமாமலை மடத்தில், ஒரு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுவாக, அங்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. நண்பர் ஒருவர் கூறக் கேட்டு, அதை காணச் சென்றேன்.

திருக்குறுங்குடி (இது ஒரு வைணவ திவ்ய தேசம் ஆகும்) கிராமத்திலிருந்து 40 விவசாயக் குடும்பத்துச் சிறுமியர் அடங்கிய குழு 'கைசிக நாடகம்' என்று அழைக்கப்படும் பழமையானதொரு நாட்டியக் கலை வடிவத்தை அரங்கேற்றியது. தூண்கள் நிறைந்த அந்த மடத்துக் கூடம் நாட்டிய நாடகம் நடத்த ஏற்றதாக இல்லாதிருந்தும், அச்சிறுமியர் சிரமமின்றி, மிக இயல்பாக, அற்புதமான முக பாவங்களுடனும், நேர்த்தியான நடன அசைவுகளுடனும் நடித்தது கண்டு பிரமித்துப் போய் விட்டேன் !

ஆடிய யாருக்கும், பரதம் பற்றி ஒன்றும் தெரியாது ! கடின உழைப்பும், பயிற்சியும், உள்ளிருக்கும் திறமையை வெளிக் கொணர்ந்து மிளிரச் செய்ய வல்லவை என்பதற்கு இந்த நாட்டிய நாடகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று தயங்காமல் கூறுவேன் ! திருக்குறுங்குடியை விட்டு அச்சிறார்கள் வெளி ஊர் ஒன்றுக்கு வருவது இதுவே முதன் முறை என்று அறிந்ததும் பிரமிப்பு அதிகமானது.

இதன் பின்னணி குறித்து விசாரித்தபோது, 'கைசிக நாடகம்' மற்றும் திருக்குறுங்குடி கிராம வளர்ச்சி பற்றி சேகரித்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1. இந்த 'கைசிக நாடகம்' திருக்குறுங்குடிக் கோயில் பெருமானான வைணவ நம்பி மேல் ஆழ்ந்த பக்தி கொண்ட, நம்படுவன் என்னும் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் வாயிலாக, பிரம்ம ராக்கதன் ஆக சபிக்கப்பட்ட பிராமணர் ஒருவர் சாப விமோசனமும், மோட்ச சித்தியும் பெறும் பழங்கதையை அடிப்படையாகக் கொண்டது. மனித நேயத்தின் மேன்மையையும், தூய்மையான பக்தியின் உன்னதத்தையும், சாதி இன வேறுபாடு வெறுக்கத்தக்கது என்பதையும் பறைசாற்றும் இந்த கைசிக நாடகமானது, 13-ஆம் நூற்றாண்டிலிருந்து, மன்னரையும், மக்களையும் ஒரு சேர வெகுவாகக் கவர்ந்து வந்துள்ளது.

2. பண்டைக்கால கோயில் சமூகங்களின் வழிபாட்டு முறையில், பாட்டும், கூத்தும் சிறப்பிடம் பெற்றிருந்ததையும் இதிலிருந்து உணரலாம். சாய்ந்த கொண்டை மற்றும் அசுரனின் உடை அலங்காரங்களில், கேரளப் பாரம்பரியத்தின் தாக்கம் இருப்பதை உணர முடிந்தது. ஒரு காலத்தில், திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இந்த கிராமம் இருந்ததாகக் கேள்விப்பட்டேன். கைசிக நாடகத்தைப் பற்றி விரிவாக ஒரு பதிவு பின்னர் எழுத உத்தேசம்.

3. திருக்குறுங்குடி கோயிலில் மட்டுமே, புனித கைசிக (கார்த்திகை மாத) ஏகாதசி தினத்தன்று இரவு, பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த 5 மணி நேர நாட்டிய நாடகம், நடிப்பவரும் ஆதரிப்பாரும் இன்றி, நாடகம் பற்றிய ஓலைக்குறிப்புகள் மறைந்து போய், 50 ஆண்டுகளுக்கு முன் மெல்ல வழக்கொழிந்தது.

4. பத்து ஆண்டுகளுக்கு முன், முனைவர் ராமானுஜம் (National school of Drama), கூத்துப்பட்டறை நடிகர் முத்துசாமி மற்றும் TVS குடும்பத்தைச் சேர்ந்த நடனமணி அனிதா ரத்னம் ஆகியோரின் பெரு முயற்சியால், இக்கலைவடிவம் மீண்டும் புத்துயிர் பெற்றது. இந்த நாடகத்தில் ஒரு காலத்தில் நடித்து வந்த கிராமத்து முதியவர்களிடம் பேசி, பழைய கையெழுத்துக் குறிப்புகளைத் தேடி தூசு தட்டிப் படித்து, கோயில் சிற்ப நுணுக்கங்களை ஆய்ந்து, வைணவ அறிஞர்களுடனும், அரையர் கலைஞர்களுடன் விவாதித்து, பழைய வடிவை ஒத்த ஒரு மறு கலை வடிவத்தை இம்மூவரும் உருவாக்கினர். நமது கிராமத்துக் கோயில் பாரம்பரியத்திற்கு ஒரு மறு வடிவம் என்றும் இதைக் கொள்ளலாம் !

5. பின்னர், திருக்குறுங்குடி கிராமத்துச் சிறார்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை நடிக்க வைத்து, அதன் வாயிலாக இந்த அற்புதமான 'கைசிக நாடக' கிராமியக் கலை வடிவத்தை மீட்டு மிளிரச் செய்திருக்கும் இம்மூவரும், அதைக் கற்று திறம்பட நடித்துக் கொண்டிருக்கும் கிராமத்துச் சிறார்களும் மிக்க பாராட்டுக்குரியவர்கள். பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் இந்த நாட்டிய நாடகத்தில் பங்கேற்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு !

6. திருக்குறுங்குடிக்கு அருகே உள்ள பாளையங்கோட்டையில் கிறித்துவர்கள் அதிகமாகவும், ஏர்வாடியில் இஸ்லாமியர்கள் அதிகமாகவும் வசிக்கின்றனர். இம்மக்களில் பலரும் இங்கு வந்து, இந்த நாட்டிய நாடகத்தைக் கண்டு களிப்பது மத நல்லிணக்கத்திற்கு ஓர் அருமையான சான்று ! முதலில், நடனம் கற்கவும், நாடகத்தில் நடிக்கவும் தங்கள் பிள்ளைகளை அனுப்பத் தயங்கிய திருக்குறுங்குடி கிராமத்துப் பெற்றோர், இந்த வருட நாட்டிய நாடகத்தின் முடிவில், பலரும் தங்கள் பிள்ளைகளை வெகுவாகப் பாராட்டுவதைக் கண்டு பெருமிதம் அடைந்தனர்.

7. திருக்குறுங்குடி வைணவத் திருத்தலமாக இருப்பினும், இங்கு கிறிஸ்துமஸ் சிறப்பாகக் கொண்டாடப்படுவதாகத் தெரிகிறது !

திருக்குறுங்குடி கிராமத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 289 ***

Saturday, January 27, 2007

288. குழந்தை லோகபிரியா நலம்

அன்பான நண்பர்களே,

சிரமம் பார்க்காமல் இந்த 'சற்றே நீண்ட' பதிவை வாசித்து விடும்படி ஒரு அன்பான வேண்டுகோளுடன்,

லோகபிரியாவுக்கு ஜனவரி 24-ஆம் தேதி காலை இதய அறுவை சிகிச்சை, ராமச்சந்திரா மருத்துவமனையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது ICU-வில் வைத்து கவனிக்கப்பட்டு வருகிறாள். மெல்ல நலமடைந்து வருகிறாள். இன்னும் 2-3 நாட்கள் ICU சிகிச்சை தொடரும் என்று டாக்டர் கூறினார். இன்று காலையில் கூட குழந்தையின் தந்தையுடன் பேசினேன். எல்லாம் நல்லவிதமாக முடிந்ததில் அவருக்கும் குடும்பத்தாருக்கும், மகிழ்ச்சியும் மனநிறைவும் என்பதை அவர் குரலிலேயே உணர முடிந்தது ! இன்னும் இரண்டொரு நாட்களில், நானும் சங்கரும் குழந்தையைப் பார்க்கப் போகிறோம்.

நமது வலைப்பதிவு நண்பர்கள் வாயிலாக 56,500 ரூபாய் உதவித்தொகையாக சேகரிக்க முடிந்தது. நமது நண்பர்களிடமிருந்து உதவி வரத் தொடங்குவதற்கு முன்பாகவே, ரூபாய் 50000 (விப்ரோவைச் சேர்ந்த நண்பர்கள் மற்றும் மாருதிராவ் என்ற தெலுங்குப்பட தயாரிப்பாளர் வாயிலாக) மருத்துவமனையில் செலுத்தப்பட்டிருந்தது.

மொத்தத் தேவை ரூ. 1,25,000 என்று உதவி வேண்டி நான் இட்ட முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். அப்போது தான், ஒரு சந்தோஷமான திருப்பம் ஏற்பட்டது. இந்த முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் போது...நாம் (Sankar, Ramki) மற்றும் நம் வலையுலக நண்பர்கள் கிட்டத்தட்ட 56500/- வரை திரட்டி விட்ட நிலையில்....இன்ப அதிர்ச்சியாக சங்கர் வீட்டின் அருகில் இருக்கும் கமலா வேதம் எஜுகேஷனல் மற்றும் சேரிட்டி டிரஸ்ட் நடத்தும் டாக்டர்.ரவிசங்கர் வேதம் அவர்கள் டிரஸ்ட் மூலமாக ரூ.75000/- கான காசோலை அளித்துவிட்டார்.

ஆக, மொத்தத் தொகையும் (1,25,000) கிடைத்து மருத்துவமனையில் செலுத்தப்பட்டது ! நமது வலையுலக நண்பர்கள் அளித்த உதவித் தொகையை வைத்து என்ன செய்யலாம் என்பதற்கு அவர்களே ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். என்னளவில் சிலவற்றைச் சொல்கிறேன். முடிவு உங்கள் விருப்பம்.

1. லோகபிரியாவின் பெயரில் வைப்புத் தொகையாக வங்கியில் கட்டி, அதன் வட்டியை குழந்தையின் தந்தை பெற்றுக் கொள்ளலாம்.

2. இன்னொரு உதவி முயற்சிக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

3. நீங்கள் அளித்த தொகையை திருப்பித் தந்து விடலாம்.


அடுத்து, செந்தழல் ரவி, மகாலஷ்மியின் கல்வி நிதியிலிருந்து (அதிகமாக இருந்த) ஒரு 20000 ரூபாயை எனக்கு அனுப்பினார். ரவி அனுப்பிய தொகையை (பின்னர் மற்றொரு உதவி முயற்சிக்குத் தேவைப்பட்டால் தரத் தயாராக இருப்பதாக எனக்கு எழுதியிருக்கும் ரவிக்கு நன்றிகள் பல !) அவருக்கு திருப்பி அனுப்பி விட்டேன்.

லோகபிரியாவின் மருத்துவ உதவிக்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த முயற்சிகளில் லோகபிரியாவின் தந்தைக்கு நானும் என் நண்பன் சங்கரும் எங்களால் இயன்ற அளவில் உதவி செய்தோம். அவை குறித்து விரிவாக ஒரு மெயில் எழுதி அனுப்புமாறு சங்கரிடம் கேட்டிருந்தேன். அம்மடலிலிருந்து தகவல்களைத் தருகிறேன். எங்களைத் தவிர, குழந்தையின் தந்தை எடுத்த முயற்சிகளில் சம்பந்தப்பட்ட பலரும் எத்தகைய நல்ல உள்ளம் படைத்தவர்கள் என்பதை எடுத்துச் சொல்வது, என் கடமையும் கூட ! இதை சங்கர் தன் மடலில் "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது" என்று சுவைபடக் கூறியிருந்தார் !!!

குழந்தை லோகப்ரியாவிற்காக செய்யப்பட்ட முயற்சிகள் மற்றும் அதன் விவரங்கள்:

1.முதல்வருக்கு மனு கொடுக்கப்பட்டது......முதல்வர் அலுவலகத்திலிருந்து எழும்பூர் குழந்தைகள் மருத்துவ மனையில் குழந்தைக்கு தேவையான சிகிச்சைகளை இலவசமாக அளிக்க ஆவன செய்வதாக கூறி கடிதம் வந்தது....ஆனால் 5 மாத குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய போதிய வசதிகள் அங்கு இல்லாத காரணத்தால் அங்கு செய்ய முடியவில்லை

2.திரு.தொல்.திருமாவளவனை சந்தித்த போது அவர் தனக்கு தெரிந்த தலைமை மருத்துவரிடம் (எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை) தொலை பேசி ஆவன செய்ய வேண்டுகோள் விடுத்தார்.அவரும் முடிந்தது செய்வதாகவும் அறுவை சிகிச்சை இன்றி குணப்படுத்த முயல்வதாகவும் உறுதியளித்தார்.

3. ரஜினி ரசிகர் ஒருவர் ரூ.10000 வழங்கினார்


4.பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் போட்டதற்கு அவர்கள் உடனே பதிலளித்து ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கடிதம் எழுதி அதில் மருத்துவ செலவில் பாதி அல்லது ரூ.50000/- இதில் எது குறைவோ அதை பிரதமர் நிதியிலிருந்து தர in principle ஒப்புதல் அளிப்பதாகவும் இந்தத்தொகையை அறுவை சிகிச்சை முடிந்த பிறகு தகுந்த ஆதாரம் மற்றும் பில்களுடன் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் எனவும் சொல்லியிருந்தனர்.மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பிந்தான் இந்தப் பணம் வரும்...ஆனால் முழுப்பணம் கட்டினால்தான் சிகிச்சை செய்வோம் இந்தக் கடிதத்தின் அடிப்படையில் செய்யவோ தள்ளுபடி தரவோ இயலாது என்று கூறி விட்டனர்.

5.தலைமை மருத்துவர் திரு.ரஞ்சித் அவர்கள் 125000 வேண்டாம்... கிட்டத்தட்ட 100000 இருந்தாலே சிகிச்சை தருகிறோம் என அன்புடன் இயைந்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

6.விப்ரோ நிருவனத்தில் வேலை பார்க்கும் நண்பர்கள் சேர்ந்து 40000/- காசோலை வழங்கியுள்ளனர்

7.வீட்டில் அறுகில் உள்ள தெலுங்கு பட இயக்குனர் தயாரிப்பாளர் திரு.மாருதி ராவ் அவர்களது வீட்டில் 10000/- அளித்தனர்

8.நாமும் சொந்தமாகவும் ,இணைய நண்பர்கள், வலையுலக நண்பர்கள் மூலம் எடுத்த முயற்சிகளும் வலையுலக நண்பர்கள் முழு முனைப்புடன் செய்த உதவிகளும், பேராதரவும் பற்றி அதிகம் எழுதவில்லை.

9. .சத்திய சாயி டிரஸ்டிற்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு மருத்துவமனை பொது மேலாளர் திரு.ஸ்ரீகுமார் அவர்களிடமிருந்து சான்று கடிதம் பெற்று தந்தால் ரூ.30000/- வரை உதவி செய்வதாக பதில் கடிதம் வந்தது.

11.இது தவிர சினேகா என்ற அமைப்பினர் மற்றும் இன்போஸிஸ் நிருவனத்திலிருந்து ராஜதுரை என்கின்ற ஒரு நண்பர் முதலியோர் குழந்தையின் தந்தையை சந்தித்து பணம் மற்றும் உதவி தர முன் வந்ததாக தெரிகிறது. ஆனால் அதற்கு முன்னமே முழு தொகை சேர்ந்ததால் இவர்களது உதவி நன்றி கூறி மறுக்கப்பட்டது.

12. லோகபிரியாவின் தந்தை அருள் உதவி வேண்டி அலைந்த அலைச்சல்களை இங்கே நிச்சயம் குறிப்பிட வேண்டும் !


சிகிச்சை முடிந்த பிறகு மருத்துவமனை கணக்கில் மீதமுள்ள பணம் மற்றும் பிரதமர் நிதியிலிருந்து முயற்சித்து பெறப்போகும் பணமும் குழந்தை கணக்கில் ஆஸ்பத்திரியில் இருக்கும் என்றும் post operation care இன்னும் ஐந்தாறு வருடங்களுக்கு செக்கப் எக்ஸிஜன்சி போன்றவற்றிற்கு உபயோகிக்கப்படும் என்றும் எந்த பணப்பட்டுவாடாவும் செய்யப்பட மாட்டாது என்பதும் நாம் கேட்டறிந்த விஷயங்கள்.

சின்னச் சின்ன செய்திகள்...ஆனாலும் குறிப்பிட வேண்டியவை

நடிகர் திரு.விக்ரம் அவர்களுக்கு உதவி கேட்டு அனுப்பப்பட்டவுடன் 2007 ஆரம்பத்தில் priority list-ல் குழந்தை லோகப்ரியாவின் பெயர் அவர்கள் உதவிப் பட்டியலில் இருந்தது. ஆனால் அதற்கு முன்னமே பணம் சேர்ந்து விட்டபடியால் அங்கிருந்து உதவி தேவையில்லாமல் போய் விட்டது. அப்பொழுது தெரிந்த மற்றும் ஆஸ்பத்திரியில் அறிந்த விஷயம் திரு.விக்ரம் அவர்கள் வருடம் முழுவதும் பல குழந்தைகளுக்கு இந்த மாதிரி அறுவை சிகிச்சைக்கு உதவி செய்வதோடல்லாமல் அவர் துணைவியாருடன் வந்து இந்த குழந்தைகளை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் பார்த்து ஆறுதல் மற்றும் தைரியம் சொல்லி செல்வது வழக்கம் .
A real STAR...& Star family.

நாம் குழந்தை லோகப்ரியாவிற்கு உதவி செய்வது பற்றி பேசிக்கொண்டிருந்த போது முன்னர் உதவி பெற்ற குழந்தை ஸ்வேதாவின் தந்தை " சார்..நான் என் குழந்தைக்காக உதவி கேட்டலைந்த போது கிடைத்த தொடர்புகள் பற்றி விவரங்கள் தருகிறேன் மற்றும் நானும் அலைந்து திரிந்து உதவ உங்களுடன் வருகிறேன் என முகம் தெரியாத இன்னொரு குழந்தைக்காக புறப்பட்ட போது தெரிந்தது
Helping and Being Good also is Contagious

இந்தக் குழந்தை வசிக்கும் சேரியில் வசிக்கும் அனைத்து கூலி தொழிளாலர்கள் மற்றும் வீட்டு வேலை செய்பவர்கள் சேர்ந்து ஐந்தும் பத்துமாக 2000/- சேகரித்தளித்த போது தெரிந்தது...
Certainly they are not poor in their Heart

உதவிக்கடிதத்தை நகல் எடுக்கச் சென்ற இடத்தில் கடிதம் படித்த நகலக உரிமையாளர் பிரதமர் அலுவலகம் போன்ற இடங்களுக்கு மனு எழுதிக் கொடுத்ததோடல்லாமல் உதவிக்கடிதங்கள் மற்ற பிற ஆவணங்களை இலவசமாக நகலெடுத்து தந்ததோடல்லாமல் அனுப்ப உதவியும் செய்து...
You can also be charitable in your Business too...என்று நிருபித்துவிட்டார்

இதிலிருந்து தெரிவது......after all the world is not as bad as we may think :)

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 288 ***

Thursday, January 25, 2007

'சூரிய நமஸ்கார' சர்ச்சை !

"வந்தே மாதரம்" குறித்த சர்ச்சையைத் தொடர்ந்து, இப்போது, பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில், மத்தியப்பிரதேசத்தின் பிஜேபி அரசு, சூரிய நமஸ்காரம் சார்ந்த தனது கூட்டு யோகா நிகழ்ச்சியை, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடத்த உள்ளது. கிட்டத்தட்ட 3 லட்சம் மாணவ மாணவிகள் இதில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அவர்கள் சூரிய நமஸ்காரத்தையும், 5 வகையான பிராணாயப் பயிற்சிகளையும் மேற்கொள்வார்கள் என்று அரசு செய்திக் குறிப்பு கூறுகிறது.

எல்லா பள்ளிகளிலும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்திந்திய இஸ்லாமிய தனிச்சட்ட வாரியம் (AIMPLB) பல இஸ்லாமிய இயக்கங்களை அழைத்து ஒரு கூட்டம் நடத்தி, அரசின் இந்த நடவடிக்கை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று குற்றம் சாட்டியுள்ளது. இந்த 'சூரிய நமஸ்கார' நிகழ்ச்சியை தடை செய்ய ஆளுனர் பல்ராம் ஜாக்கரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஜமைத் உல்மா ஹிந்த் (JUH), தடை வேண்டி, உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

JUH-ஐ சேர்ந்த ஹாஜி மொஹமத் ஹரூண், "யோகப் பயிற்சிகளை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அதே நேரத்தில், சூரிய நமஸ்காரம் என்ற பெயரில், இந்துக்கள் அல்லாத மாணவ மாணவிகளையும், சுலோகங்களைச் சொல்லி சூரியனை வழிபட வைப்பது, அரசியல் சட்டத்திற்கு புறம்பானது, இஸ்லாமிய மதக் கொள்கைகளுக்கும் எதிரானது" என்று கூறியுள்ளார்.

கிறித்துவர்களும் அரசின் இந்த செயலைக் கண்டித்துள்ளனர். யோகா என்ற பெயரில், அரசு மதவெறியைத் தூண்டுவதாக, மத்தியப்பிரதேச கத்தோலிக ஆலயத்தைச் சேர்ந்த ஆனந்த் முட்டுங்கல் குற்றம் சாட்டியுள்ளார். 'முதலில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது அவரவர் விருப்பத்தைச் சார்ந்தது என்று கூறிய அரசு, மாணவ மாணவிகளை நிகழ்ச்சிக்கு அனுப்புமாறு பள்ளிகளை நிர்பந்தப்படுத்துகிறது' என்று மேலும் கூறியுள்ளார் !

இவற்றுக்கிடையே, இஸ்லாமிய மக்கள் தங்கள் பிள்ளைகளை நிகழ்ச்சி அன்று பள்ளிக்கு அனுப்பப் போவதில்லை என்று கூறி வருகின்றனர். இன்று நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சி, நடந்ததா (எந்த அளவில்) என்பது குறித்து அறிந்தவர் கூறுங்களேன் !

Courtesy: Indian Express

*** 287 ***

Saturday, January 20, 2007

286. பெரியாருக்கு மேலும் சிலைகள் !

மார்கழி மாதத்தில் நான் பதிந்த குளிர்ச்சியான திருப்பாவை விளக்கப் பதிவுகளைத் தொடர்ந்து, சுஜாதாவை பொதுவில் வைத்து பலரும் கும்மியதைத் தொடர்ந்து, தைப்பொங்கல் கொண்டாடுதல் குறித்த காரசார வலைப்பதிவு விவாதங்களைத் தொடர்ந்து, பெரியார் சம்பந்தப்பட்ட சற்று சூடான புது விவகாரம் உங்கள் பார்வைக்கு :) கொஞ்ச நாள் வெளியில் இருந்து, மீண்டும் ஜோதியில் (சரவணபவன் அண்ணாச்சிக்கும் இந்த ஜோதிக்கும் தொடர்பு இல்லீங்கண்ணா!) ஐக்கியமாக முடிவெடுத்ததும் இப்பதிவுக்கு ஒரு காரணம் ;-) சரி, மேட்டருக்கு போகலாமா !

ஸ்ரீரங்கத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயில்களுக்கு அருகே, 128 பெரியார் சிலைகளை நிறுவ இருப்பதாக திராவிட கழகம் கூறியிருப்பதற்கு, தமிழக முதல்வரின் மறைமுக ஆதரவு இருப்பதாக அவுட்லுக் செய்தியொன்று கூறுகிறது. ஏற்கனவே, ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதையும், அதைத் தொடர்ந்து அயோத்தியா மண்டபம் மற்றும் இன்னபிற இடங்களிலும் நடந்தேறிய வன்முறை நிகழ்விகளையும் வைத்துப் பார்க்கும்போது, இவ்வாறு நடந்தால் (மெனக்கெட்டு கோயில்களுக்கு அருகே பெரியார் சிலைகள் நிறுவ இருப்பதை மட்டுமே சுட்டுகிறேன்!) ஏற்படவிருக்கும் பிரச்சினைகளை நாடு தாங்குமா என்ற கேள்வி எழுகிறது ! பெரியார் உயிரோடு இருந்திருந்தால், நடப்பவற்றைக் கண்டு நிச்சம் அவரே வெறுத்துப் போயிருப்பார் !!!

ஒரு பேட்டியில், முதல்வரின் (அவரது பாணியிலான!) கிண்டலான பேச்சு வேறு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயிலுக்கு உள்ளே இருக்கும் உடையற்ற சிலைகளைக் காட்டிலும், வெளியே உள்ள பெரியார் சிலை கண்ணியமான தோற்றத்தில் தானே காட்சியளிக்கிறது, கோயில் அர்ச்சகர்களே சற்று தயக்கத்துடன் தான் அச்சிலைகளுக்கு உடை உடுத்த வேண்டியுள்ளது என்று பொருள்பட கூறி, முத்தாய்ப்பாக, ஸ்ரீரங்கத்து பெரியார் சிலைக்கு ஏன் இந்துக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து, மதத்தை முன்னிறுத்தி மக்களிடையே பகைமை உணர்வை வளர்க்க முயற்சிப்பதைக் காரணமாகக் காட்டி, முதல்வர் மீது வழக்கு தொடரப் போவதாக சில இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன.

நன்றி: OUTLOOK

*** 286 ***

Tuesday, January 16, 2007

வங்கக்கடல் கடைந்த மாதவனை - TPV30 - பகுதி II

இப்பாசுரத்தின் முதற்பகுதியை வாசித்து விட்டுத் தொடரவும்.

முதல் பாசுரத்தில், நோன்புக்கான நேரம், நோன்புக்கான மூலப்பொருள் (கிருஷ்ணன்) குறித்தும்,

2-வது பாசுரத்தில், நோன்பின்போது செய்யத் தகாதவை பற்றியும்,

3-வது பாசுரத்தில், நோன்பினால் விளையும் நன்மைகள் குறித்தும்,

4-வது பாசுரத்தில், மழைக்காக வருணனை வேண்டியும்,

5-வது பாசுரத்தில், நோன்புக்கு ஏற்படக் கூடிய தடைகளை கண்ணனே நீக்க வல்லவன் என்று போற்றியும்,

6-வது பாசுரத்திலிருந்து 15-வது பாசுரம் வரையில், கோகுலத்தில் வாழும் கோபியரை, உறக்கம்
விட்டெழுந்து, கண்ணனைத் தரிசித்து வணங்கச் செல்லும் அடியார் கூட்டத்தோடுச் சேருமாறு விண்ணப்பித்தும்,

16-வது பாசுரத்தில், நந்தகோபர் மாளிகையில் உள்ள துவார பாலகரை எழுப்பி, உள் செல்ல அனுமதி வேண்டியும்,

17-வது பாசுரத்தில், நந்தகோபர், யசோதா பிராட்டி, கண்ணபிரான், பலராமன் என்று நால்வரையும் விழித்தெழுமாறு வரிசையாக விண்ணப்பித்தும்,

18-வது பாசுரத்தில், நப்பின்னை பிராட்டியை மிக்க மரியாதையுடன் விழித்தெழ வேண்டியும்,

19-வது மற்றும் 20-வது பாசுரங்களில், நப்பின்னை, கண்ணன் என்று, ஒரு சேர, இருவரையும் உறக்கம் விட்டு எழுமாறு விண்ணப்பித்தும்,

21-வது மற்றும் 22-வது பாசுரங்களில், (கோபியர்) கண்ணனின் கல்யாண குணங்களைப் போற்றியும், தங்கள் அபிமான பங்க நிலைமையை ஒப்புக் கொண்டும், கண்ணனின் அருட்கடாட்சத்தை மட்டுமே (தங்கள் சாபங்கள் ஒழிய) நம்பி வந்திருப்பதையும்,

23-வது பாசுரத்தில், கிருஷ்ண சிம்மத்தை அவனுக்கான சிம்மாசனத்தில் அமர வேண்டியும்,

24-வது பாசுரத்தில், அம்மாயப்பிரானுக்கு மங்களாசாசனம் செய்தும் (திருப்பல்லாண்டு பாடிப்
போற்றியும்),

25-வது பாசுரத்தில், (கோபியர்) தங்களை ரட்சித்து அரவணைக்க அவனைத் தவிர வேறு
மார்க்கமில்லை என்று உணர்த்தியும்,

26-வது பாசுரத்தில், நோன்புக்கான பொருள்களை கண்ணனிடம் யாசித்தும்,

27-வது பாசுரத்தில், பாவை நோன்பு முடிந்ததும், (கோபியர்) தாங்கள் வேண்டும் பரிசுகளை
பட்டியலிட்டும்,

28-வது பாசுரத்தில், (கோபியர்) தங்களது தாழ்மை, கண்ணனின் மேன்மை, அவனுடனான பிரிக்க முடியாத உறவு, தங்களது பாவ பலன்களை நீக்கக் கோருதல் ஆகியவை பற்றியும்,

29-வது பாசுரத்தில், எந்நாளும் பிரியாதிருந்து கண்னனுக்கு கைங்கர்யம் செய்வதற்கு அருள வேண்டியும்,

30-வது பாசுரத்தில், திருப்பாவை சொல்லும் அடியார்கள் கண்ணபிரானின் அன்புக்கும், அருளுக்கும் பாத்திரமாகி, பேரானந்தம் அடைவர் என்ற செய்தியை வெளியிட்டும்

30 அற்புதமான பாசுரங்கள் வாயிலாக, முதற்பாடலிலிருந்து இறுதிப் பாசுரம் வரை, தொடர்ச்சியும் ஓட்டமும் பங்கப்படா வகையில், கோதை நாச்சியார், ஒரு கிருஷ்ண காவியத்தையே படைத்துள்ளார் ! இனிய எளிய தமிழில் வேத சாரத்தை உள்ளர்த்தங்களில் வெளிப்படுத்தும் திருப்பாவை, 'கோத உபநிடதம்' என்று போற்றப்படுகிறது !


பாசுரச் சிறப்பு:

1. இங்கே "வங்கக் கடல் கடைந்த"வனை 'மாதவன்' என்று ஆண்டாள் அழைக்கக் காரணம், அவரது ஆச்சார்யனும், தந்தையும் ஆன பெரியாழ்வாரின் உபதேசத்தை மனதில் வைத்தே என்று ஒரு கருத்துண்டு, அதாவது, பெரியாழ்வார் பாடியது போல, "மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்பதோர் தெய்வத்தை நாட்டி" ! மேலும், மாதவன் என்பதற்கு பிராட்டியோடு கூடி இருப்பவன் என்று பொருள் இருப்பதால், திருப்பாற்கடலைக் கடைந்து அப்போது தோன்றிய திருமகளை தன் திருமார்பில் தரித்துக் கொண்ட அம்மாயப்பிரானை 'மாதவன்' என்றழைப்பது பொருத்தமாகிறது !

2. 'கேசவன்' என்ற திருநாமம் பரமனது பரத்துவத்தை உணர்த்துகிறது. கேசவனில் உள்ள 'க' சப்தம் பிரம்மனையும், 'சவன்' ஈஸ்வரனையும் குறிக்கின்றன. அதாவது, பிரம்மனும், சிவனும் திருமாலுக்குள் அடக்கம் என்பதைச் சொல்கிறது.

3. "வங்கக்கடல் கடைந்த" என்ற திருச்செயல், அடியார் மேல் பரமனுக்குள்ள வாத்சல்யத்தையும், பரமனது எங்கும் வியாபித்திருக்கும் நிலையையும் உள்ளர்த்தமாக கொண்டிருப்பதாக பெரியோர் கூறுவர்.

4. 'பட்டர்பிரான் கோதை சொன்ன' என்று அறிவிப்பதன் மூலம், தன் தந்தையே தன் ஆச்சார்யன்
என்பதை உணர்த்துகிறார், சூடிக் கொடுத்த நாச்சியார் ! மதுரகவியாழ்வாரும், "தென்குருகூர் நம்பிக்கு அன்பானை மதுரகவி சொன்ன சொல்" என்று பாடியே, கண்ணிநுண் சிறுத்தாம்பை நிறைவு செய்துள்ளார். ஆகையால், ஆண்டாளின் திருப்பாவையும், மதுரகவியின் கண்ணிநுண் சிறுத்தாம்பும் ஆச்சார்யனை முன்னிறுத்தியதால், தனிச்சிறப்பு பெற்ற பிரபந்தங்களாகக் கருதப்படுகின்றன.

5. செங்கண் - பரமனின் திருக்கண்களானது, திவ்யப்பிரபந்தத்தில் பல இடங்களில் சுட்டப்பட்டுள்ளன ! அவை அழகும் வசீகரமும் கொண்டதோடன்றி, பரமனின் அருட் கடாட்சத்தை அடியார்களிடம் செலுத்தும் திரு அவயங்களாக அறியப்படுகின்றன ! ஆழ்வார்கள் பரந்தாமனின் திருக்கண்கள் மேல் பெருங்காதல் கொண்டவர்கள் !!! ஆண்டாளும், கண்ணனது கருணை பொழியும் கண்களை, திருப்பாவையில்

கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்* பங்கயக் கண்ணானை
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்* அங்கண் இரண்டும்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்


என்று 5 இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

6. "கோவிந்தா" என்ற திருநாமம் திருப்பாவையில் மூன்று முறை (கூடாரை வெல்லும், கறவைகள் பின்சென்று, சிற்றஞ்சிறுகாலே வந்துன்னை என்று 3 பாசுரங்களில்) குறிப்பிடப்பட்டிருப்பது போல, "நாராயணா" என்ற திருநாமமும்

மார்கழித் திங்கள் மதி நிறைந்த - "நாராயணனே நமக்கு பறை தருவான்",
கீசுகீசென்று ஆனைச்சாத்தன் கலந்து - "நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்",
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் - "நாற்றத் துழாய் முடி நாராயணன்"


என்று மூன்று முறை வருகின்றன !

7. செல்வத் திருமால் - பரமன் ஆன ஸ்ரீநிவாசன், அளவிட முடியாத ஐசுவர்யங்களையும், அடியார்கள் பால் பேரன்பும், கருணையும் உடையவன்.
த்வய மந்த்ரத்தின் பூர்வப் பகுதியின் 'ஸ்ரீமத்' சப்தம் 'மாதவன்' என்று வரும் பாசுரத்தின் முதலடியிலும், உத்தரப் பகுதியினுடையது 'செல்வத் திருமால்' என்று வரும் கடைசி அடியிலும் வெளிப்படுவது சிறப்பு !

8. 'எங்கும் திருவருள் பெற்று" என்பது இம்மையிலும், மறுமையிலும் அவன் திருவருளை வேண்டுவதைக் குறிக்கிறது.

சூடிக் கொடுத்த நாச்சியார் திருவடிகளே சரணம் !

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 285 ***

Saturday, January 06, 2007

இந்திய கிரிக்கெட் - சொந்தச் செலவில் சூன்யம்

இந்திய-தென்னாபிரிக்காவுக்கு இடையேயான 3-வது டெஸ்டின் நான்காம் நாள், இந்தியா ஆடிய மட்டரக கிரிக்கெட்டைப் பார்க்கும் துர்பாக்கிய நிலை எனக்கு ஏற்பட்டது. சொந்தச் செலவில் சூன்யம் என்பது இது தானோ ??? அனுபவமும், திறமையும் உள்ள அணி வீரர்கள் கடைபிடித்த கேவலமான அணுகுமுறை, இந்த டெஸ்டில் தோல்வி அடையும் நிலைக்கு இந்தியாவை தள்ளி விட்டது ! இந்தியா செய்த தவறுகளும் முட்டாள்தனங்களும் ஏராளம்.

1. முதல் இன்னிங்க்ஸில் திறமையாக ஆடிய தினேஷ் கார்த்திக்கை, தொடக்க ஆட்டக்காரராக களமிறக்காமல், 'Out of Form' சேவாக்-ஐ முதலில் ஆட அனுப்பியதில், இந்தியாவுக்கு 6/2 என்று உடனடியாக பின்னடைவு ஏற்பட்டது.

2. சச்சின் ஆடிய ஆட்டம், அபத்தத்தின் உச்சம் ! இத்தனை சாதனைகளைப் படைத்தவர், கிரிக்கெட் அறிவு மிக்கவர் என்று போற்றப்படும் ஒருவர், ஆட்டத்திலிருந்தே சீக்கிரம் ஓய்வு பெற மாட்டாரா என்ற ஆதங்கம் தோன்றும் வகையில், மிக மோசமாக விளையாடினார் !

3. தனது முதல் டெஸ்டில் விளையாடும் 'சின்னப்பையன்' ஹாரிஸ¤க்கு, ஷேன் வார்னுக்கு தரும் மரியாதையை வழங்கி கௌரவித்தது, பார்க்கக் கொடுமையாக இருந்தது ! எப்படி இருந்த சச்சின் இப்படி ஆயிட்டாரே என்ற பரிதாபமே மிஞ்சியது. கிட்டத்தட்ட 75 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். அம்பயரே அவரது மட்டமான ஆட்டத்தைப் பார்க்கச் சகிக்காமல், அவருக்கு LBW கொடுத்து, அவரை களத்தை விட்டு வெளியேற்றியது சரி என்றே கூறுவேன் ;-)

4. 114-3 என்பதிலிருந்து 121-6 என்ற சரிவு ஏற்பட்டதற்கு சச்சினே பொறுப்பேற்க வேண்டும் ! இந்த டெஸ்டில் இந்தியா தோல்வி அடைந்தால் (அடைவது உறுதி என்றே நினைக்கிறேன்!) சச்சினே அதற்கு முக்கியக் காரணம் என்று திட்டவட்டமாகக் கூறுவேன்.

5. கங்குலி களத்தில் இருந்தவரை, நன்றாக விளையாடிய டிராவிட்டும், சச்சினின் அபத்த அணுகுமுறை அவரையும் தொற்றிக் கொண்டதால், சீனப் பெருஞ்சுவராகவே மாறி விட்டார் ! இறுதியில், அடிக்கப் போய், பந்து வீச்சாளர் ஹாரிஸ¤க்கு ஒரு மென்மையான return catch கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

6. லஷ்மணை ரன் அவுட் ஆக்கிய பெருமையும் சச்சினையே சாரும் ! தான் பந்தை எதிர்கொள்ள வேண்டுமே என்ற பயத்தில், இல்லாத இரண்டாவது ரன்னுக்கு, லஷ்மணை அழைத்து அவரை வீட்டுக்கு அனுப்பினார் !

7. நன்றாக மன உறுதியுடன் ஆடிய கங்குலி, முக்கியமான தருணத்தில், கவனம் சிதறி, கல்லியில் காட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ! அவர் சதம் அடிக்க நல்ல வாய்ப்பு இருந்ததாகவே கருதுகிறேன்.

8. நமது சீனியர் வீரர்கள் தமிழ்நாட்டு இளஞ்சிங்கம் கார்த்திக்கிடம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன ! 2-வது இன்னிங்க்ஸில் மீண்டும் சிறப்பாக ஆடி, 48 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா, ஆட்ட நேர இறுதியில், 55-2 என்ற நிலைக்கு முன்னேறி இருந்தது. டெஸ்டின் கடைசி நாள் இன்னும் 155 ரன்கள் எடுக்க வேண்டும், எடுத்து வெற்றி பெற்று, 2-1 என்று டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி விடுவார்கள் என்றே நினைக்கிறேன். நமது பந்து வீச்சாளர்களாவது (முக்கியமாக அனில் கும்ப்ளே) கொஞ்சம் fighting spirit-ஐ காட்டுவார்களா ? அல்லது மழை வந்து இந்திய அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றுமா ?

இப்போட்டியில் (ஒரு வேளை அதிசயமாக!) இந்தியா வெற்றி பெற்றாலும், சச்சினையும், சேவாக்கையும் சில மாதங்கள் (கங்குலியைப் போல) அணியிலிருந்து விலக்கி வைத்தல் நலம் பயக்கும் என்பது என் எண்ணம் !!! அவர்களுக்கு வேண்டிய வாய்ப்புகள் வழங்கியாகி விட்டது.

No one is indispensable and rules and policies are applicable to every one !

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 276 ***

Sunday, December 31, 2006

உயிர் வாழ உதவி வேண்டி - 2

அன்பான நண்பர்களே,

சிரமம் பார்க்காமல் இந்தப் பதிவை வாசித்து விடும்படி ஒரு அன்பான வேண்டுகோளுடன்,

இரு மாதங்களுக்கு முன் குழந்தை ஸ்வேதாவின் மருத்துவ உதவிக்காக சிங்கை நண்பர் அன்பு, என் வலைப்பதிவு வாயிலாக முன் வைத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, பல நண்பர்கள் பொருளுதவி செய்தனர். கிட்டத்தட்ட 40000 ரூபாயை சேகரித்து, மருத்துவமனைக்கு அனுப்ப முடிந்தது.

பார்க்க: http://balaji_ammu.blogspot.com/2006/11/blog-post_04.html

ஸ்வேதாவுக்கு நல்ல விதமாக இதய அறுவை சிகிச்சையும் நடைபெற்று, தற்போது நலத்துடன் இருக்கிறாள்.

பார்க்க: http://balaji_ammu.blogspot.com/2006/12/blog-post_17.html

ஒரு வாரம் முன்பு, ஸ்வேதாவின் வீட்டுக்குச் சென்று அவளை பார்த்து விட்டு வந்தேன். சக வலைப்பதிவர்களான சங்கரையும், மதுமிதாவையும் உடன் அழைத்துச் சென்றிருந்தேன். எல்லாம் நல்லபடியாக முடிந்து குழந்தை நலம் பெற்றதில், அவள் பெற்றோருக்கு அளவில்லா மகிழ்ச்சியும், எங்களுக்கும் மிகுந்த மனநிறைவும் ! இனிமையான சந்திப்பும் கூட. ஸ்வேதா எங்களை டாக்டர்கள் என்று நினைத்து முதலில் மிரண்டு எங்கள் கிட்டேயே வர மறுத்தாள் ! பின், பயம் விலகி, சற்று சிரிக்கவும், கிளம்பும் சமயம் டாட்டாவும் காட்டினாள் :)

இரு வாரங்களுக்கு முன், நண்பர்கள் ரஜினி ராம்கி மற்றும் சங்கர் மூலமாக இன்னொரு பிஞ்சுக் குழந்தைக்கு (லோகப்பிரியா) மருத்துவ உதவி தேவைப்படுவதாக செய்தி வந்தது. ராம்கி தனது ரஜினி ரசிகர்கள் சங்கம் மூலம் 12000 ரூபாய் கலெக்ட் செய்துள்ளதாகக் கூறினார். சங்கர், லோகப்பிரியாவின் தந்தையை சந்தித்து விவரங்களைக் கேட்டு எனக்கு அனுப்பிய மடலையும், ராம்கியின் மடலையும், உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். குழந்தைக்கு ஒரு மாதத்திற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

********************************
அன்புள்ள பாலாஜி

இதனுடன் குழந்தை லோகப்ரியாவின்(5 Month's old) மருத்துவ உதவிக்காக இருதய நிபுணர் டாக்டர் . M.S.ரஞ்சித் கொடுத்துள்ள கடிதத்தை இணைத்துள்ளேன்.

குழந்தை இப்போது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ளது. அங்கு தேவையான உபகரணங்கள் இல்லாத காரணத்தால் அங்குள்ள மருத்துவர்கள் குழந்தையை ராமச்சந்திராவில் காட்டும் படி பரிந்துரைத்துள்ளனர்.
இம் குழந்தையின் தந்தை போன வார இறுதியில் என்னை வந்து சந்தித்தார்.
குழந்தை லோகப்ரியாவின் தந்தை திரு.அருள் மீன்பாடி வண்டி எனப்படும் ட்ரை சைக்கிள் ஓட்டுகிறார்.தாயார் ஒரு வீட்டில் வீடு பெறுக்கும் வேலை செய்கிறார்.இப்போது குழந்தையின் உடல்நிலை காரணமாக அதுவும் போக முடியவில்லை.

இவர்கள் வசிப்பது எனது வீட்டிற்கு அருகில் உள்ள குடிசைப் பகுதியில்
இவர்களது முதல் ஆண் குழந்தையும் 2 ஆண்டுகளுக்கு முன் இதே போல் இதய வியாதியால் இறந்து விட்டது..சரியான டையக்னாஸிஸ் மற்றும் சிகிச்சையின்றி...கொடுமை என்னவென்றால் என்ன வியாதி என்றே இவர்களிடம் சொல்லப் படவில்லை.ஹெரிடிடரி என்றும் விளக்கவில்லை...இது தெரியாத அறியாமையால் இரண்டாவது குழந்தையும் பெற்று அதுவும் அதே நோயால் அவதியுரும் நிலை எந்த பெற்றோருக்கும் வர வேண்டாம்அப்போதே சொல்லியிருந்தால் இரண்டாவதாக குழந்தை பெற்றே இருக்க மாட்டோம் என இப்போது கதறுகிறார்கள்.

அறியாமையால் உதவுவதற்கு யாருமின்றி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை கஷ்டப்பட்டு ரூ.20,000/- சேகரித்துள்ளனர்( அவர்கள் குடிசைப் பகுதியில் உள்ள அனைத்து கூலி வேலை/வீட்டு வேலை செய்யும் மக்கள் 50, 100 என உதவி செய்து இந்த தொகையை கொடுத்துள்ளனர்
எங்கள் தெருவில் உள்ள தெலுங்கு டைரக்டர்,தயாரிப்பாளர் மாருதி ராவ் ரூ.10,000/- உதவி செய்துள்ளார்

ஆக மொத்தம் ரூ 30,000/- சேர்ந்துள்ளது...மேலும் 100000 தேவை இதில் பெரும் பகுதி சேர்ந்து விட்டால் கூட அறுவை சிகிச்சை செய்து தர டாக்டர் சம்மதித்துள்ளார்.

அறுவை சிகிச்சைக்காக ஜனவரி-27 என நாள் குறித்திருக்கிறது...இருந்தாலும் பணம் சேர்ந்து விட்டால் முன்னமே செய்து விடுவார்கள்.

அன்புடன்...ச.சங்கர்
*****************************

Here is one Medical Request. Baby. Loga Priya aged 3 months, admitted in Shri Ramachandra Hospital, Porur, suffering from Congenital Hear Disease and she has to undergo Open Heart SErgety which will cost around 1.25 lakhs and the same has to be done by January 2007. I've verified the same request and it's a genuine one, family is a lower middle class and father is a technician.

Name of the Patient : Baby. Loga Priya
Ref. No. 0951431
Consultant : Dr. M.S. Ranjit,
Professor Paediatric Cardilology,
Sri Ramachandra Hospital.
Contact No. 24768403 Ext. 450 & 464
E-Mail : ranjitmadathil@yahoo.com

* Any amount can be made but it should reach on or before 27.1.2007

Thanks & Regards,
Ramki
************************

தங்களால் இயன்ற உதவியை, அது எவ்வளவு சிறியதாக இருப்பினும், செய்யுமாறு வேண்டுகோள் வைக்கிறேன். உதவி செய்வதற்கு, கீழ்க்கண்ட மின் மடல் முகவரிகளில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

rajni_ramki@yahoo.com
sankar.saptharishi@gmail.com
balaji_ammu@yahoo.com

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 275 ***

Monday, December 18, 2006

வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் அணி !

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்தியா சற்று நேரம் முன்பு, வெற்றி பெற்று வரலாறு படைத்தது !!! தென்னாபிரிக்காவில் நடந்த டெஸ்ட போட்டிகளில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் வெற்றி இது ! இதற்கு முன் நடைபெற்ற ஒரு நாள் பந்தயங்களில் இந்திய அணி சந்தித்த மோசமான தோல்விகளை வைத்துப் பார்க்கும்போது, இவ்வெற்றி ஒரு மகத்தான வெற்றி என்று நிச்சயம் கூற முடியும். அதுவும் ஓர் அணியாக விளையாடி, இந்த உன்னத வெற்றிக்கு அணி வீரர்கள் பலரும் பங்களித்தனர் என்றால் அது மிகையில்லை.

இன்று சற்று உடல் நலக் குறைவால் அலுவலகம் செல்ல முடியாமல் போனது கூட நல்லது தான் :) டிவியில் இந்திய வெற்றியையும், இந்திய அணியினரின் வெற்றிக் கொண்டாட்டத்தையும் பார்த்து ரசிக்க முடிந்ததில் மகிழ்ச்சியே ! எப்போதாவது தானே இது போன்ற தருணங்கள் காணக் கிடைக்கிறது ;-)

இந்த வெற்றிக்கு அணி வீரர்கள் பலரும் காரணமாய் இருந்தனர். இந்தியாவின் முதல் இன்னிங்க்ஸில் சச்சின் 44 ரன்களும், கங்குலி 51 ரன்களும் எடுத்து, இந்தியா 249 ரன்கள் சேர்க்க உதவினர். VRV சிங்கும் இன்னிங்க்ஸின் இறுதியில் கங்குலிக்கு துணையாக நின்று 29 ரன்கள் எடுத்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும் !!!

தென்னாபிரிக்க அணி பேட் செய்தபோது, ஓர் இளஞ்சிங்கத்தை போல் பந்து வீசிய ஸ்ரீசாந்த் 5 விக்கெட்டுகளையும், அனுபவமிக்க ஜாகீரும், அனில் கும்ப்ளேயும் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி தென்னாபிரிக்க அணியை 84 ரன்களுக்கு சுருட்டினார்கள் ! சேவாக் மற்றும் லஷ்மண் ஆகியோர் தலா இரண்டு அருமையான காட்ச்களைப் பிடித்தனர்.

இந்தியாவின் 2-வது இன்னிங்க்ஸில் சேவாக் அதிரடியாக ஆடி 33 ரன்களும், கங்குலி 25 ரன்களும், லஷ்மண் நிதானமாக ஆடி 73 ரன்களும் எடுத்தனர். இன்னிங்க்ஸின் இறுதியில் ஜாகீர், லஷ்மணுக்குத் துணையாக நின்று ஆடி, 37 ரன்கள் எடுத்தது ஆட்டத்தின் சிறப்பு அம்சம் ! இந்தியா 236 ரன்கள் எடுத்து, தென்னாபிரிக்காவுக்கு 402 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது.

தென்னாபிரிக்கா, இரண்டாவது இன்னிங்க்ஸில் 278 ரன்கள் மட்டுமே எடுத்து, 123 ரன்கள் வித்தியாசத்தில், நான்காவது நாள் உணவு இடைவேளை முன்பாகவே தோல்வியைத் தழுவியது ! ஸ்ரீசாந்த், ஜாகீர், கும்ப்ளே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அனில் கும்ப்ளே, போலக்கும், பிரின்ஸ¤ம் கூட்டு சேர்ந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த நேரத்தில், அவ்விருவரையும், clean bowled செய்து தான் ஒரு மாஸ்டர் பந்து வீச்சாளர் என்பதை மறுபடி ஒரு முறை நிரூபித்தார் !! பிரின்ஸ் 97 ரன்கள் எடுத்து, சதத்தை நழுவ விட்டார். 2-வது இன்னிங்க்ஸிலும், சேவாக் இரண்டு நல்ல காட்ச்கள் பிடித்தார்.

இந்த அற்புதமான இந்திய வெற்றிக்கு, இளமையும், அனுபவமும் ஒரு சேர நின்று வழி வகுத்தன என்று சந்தோஷமாகக் கூறலாம் !

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 271 ***

Sunday, December 17, 2006

குழந்தை ஸ்வேதா நலம்

அன்புக்குரிய நண்பர் சிங்கை அன்பு அவர்கள் குழந்தை ஸ்வேதாவின் மருத்துவ உதவிக்கான முயற்சியை, எனது பதிவில் வெளியிட்ட ஒரு வேண்டுகோள் வாயிலாகத் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக வலையுலக நண்பர்கள், தகவல்கள் அளித்தும், பொருளுதவி செய்தும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

ஸ்வேதாவின் இதய அறுவை சிகிச்சை ஒரு வாரம் முன்பு நல்லபடி நடந்து முடிந்தது. ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்த ஸ்வேதா, தற்போது வீட்டுக்கு வந்து விட்டாள். அறுவை சிகிச்சை நடந்த இடத்தில் அவ்வப்போது சற்று வலியிருந்தாலும், குழந்தை ஸ்வேதா நலமாகவே இருக்கிறாள். ஒரிரு மாதத்தில் பூரண குணம் அடைந்து விடுவார் என்று டாக்டர் கூறியுள்ளார்.

நேற்று மருத்துவமனை சென்று குழந்தையைப் பார்க்கலாம் என்று எண்ணியிருந்தேன், அதற்குள் ஸ்வேதா டிஸ்சார்ஜ் ஆகி, வீட்டுக்குச் சென்று விட்டாள். எனது உடல் நலமும் சற்று சரியில்லாத நிலையில், ஒரு 2-3 நாட்கள் கழித்து, ஸ்வேதாவை அவளது வீட்டிற்கே சென்று பார்க்கலாம் என்றிருக்கிறேன். இந்த நேரத்தில், உதவிய நண்பர்களுக்கும், ஸ்வேதா குணமடைய வாழ்த்திய / பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 270 ***

Sunday, December 10, 2006

சாந்தி - வெள்ளி வென்ற தங்க மங்கை

தோஹாவில் நடைபெறும் ஆசியாத் விளையாட்டுக்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சாந்தி சவுந்தராஜன் என்ற 24 வயது வீராங்கனை, 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்று (2:03:16) வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் பதக்கப் பட்டியலில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ! மூன்றாவது இடத்தைப் பிடித்த கழகஸ்தானைச் சேர்ந்த விக்டோரியாவை 3/100 வினாடிகள் வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளினார்.
Photobucket - Video and Image Hosting
அவரது ஓட்டத்தை டிவியில் பார்த்தேன், நிஜமாகவே கடைசி 100 மீட்டர் அபாரமாக, புயல் போல ஒடி, அனுபவமிக்க பலரை பின்னுக்குத் தள்ளி, இந்த சாதனையைப் புரிந்தார் !!! பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்த பெருவாரியான இந்தியர்கள் தன்னை உற்சாகப்படுத்தியது, பதக்கம் பெற வேண்டும் என்ற தனது உத்வேகத்தை அதிகப்படுத்தியது என்று சாந்தி கூறியிருக்கிறார். தனது பயிற்சியாளர் நாகராஜனையும் வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு, சாந்தியின் இந்த மகத்தான சாதனையை பாராட்டி அவருக்கு 15 லட்ச ரூபாயை பரிசாக அறிவித்துள்ளது.

புதுக்கோட்டையில், ஓர் ஏழைக் குடும்பத்தில் (மொத்தம் ஏழு பேர்) பிறந்த சாந்தி, முதலில் ஓடத் தொடங்கியதே தனது குடும்பத்தின் வருமானத்தைப் பெருக்கத் தான். ஏனெனில், அவரது (கூலி வேலை பார்க்கும்) தாயாரின் சொற்ப வருமானத்தில் சாந்தியின் குடும்பம் வறுமையின் கொடுமையில் வாடியது. இதய நோயில் வாடும் அவரது தந்தை, வேலைக்குச் செல்ல முடியாத சூழல் !

சென்ற வருடம், பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த மராத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு, மூன்றாவது இடம் பெற்றதில், சாந்திக்கு ரூ.25000 கிடைத்தது. அதைக் கொண்டு அவரது நான்கு தம்பி தங்கைகளின் கல்விச் செலவை சமாளித்தார். பின்னர், பெடரேஷன் கோப்பை 800 மீ ஓட்டத்தில், முதலிடம் வந்து தங்கம் வென்றார். அதன் பின்னர், செப்டம்பர் 2005-இல் நடந்த ஆசிய தடகளப் போட்டிகளில், 800 மீ ஓட்டத்தில், வெள்ளிப் பதக்கம் வென்றார். மிகுந்த குடும்ப கஷ்டங்களுக்கிடையில், அயரா முயற்சியோடு, படிப்படியாக முன்னுக்கு வந்த சாந்தியை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஒரு தடகள வீராங்கனைக்கு, சரியான சத்துணவு மிக அவசியமானது. ஆனால், அவரது குடும்பமே அவரை நம்பியிருக்கும் சூழலில், சாந்தி பல நேரங்களில் பட்டினி கிடந்திருக்கிறார். தற்போது மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் சாந்தி, தனது ஓட்டப்பந்தய வெற்றிகள் தனக்கு ஒரு நல்ல வேலையைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையோடு உள்ளார்.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 269 ***

Friday, December 08, 2006

Warning ! Hazardous Material

இதைப் பிரசுரிப்பதால், பெண்ணியவாதிகள் என்னை கண்ணியமற்றவன் என்று எண்ண வேண்டாம் !!! Please take it in good humour and please do not come knocking at my door, with brick bats :))) வேண்டுமானால், இந்த 'data sheet'-ஐ எழுதியவரைக் கண்டுபிடித்து உங்கள் முன் ஆஜர்படுத்த ஆவன செய்கிறேன் !

Photobucket - Video and Image Hosting

எ.அ.பாலா

### 268 ###

Wednesday, December 06, 2006

சிந்திக்க மறுக்கும் சிந்தனாவியாதிகள்

கி.அ.அ. (கிராமத்து அரட்டை அரசியல்) அனானி ஒரு மேட்டரை மெயிலில் அனுப்பி, இவ்வாறு எழுதியிருந்தார்:
**************************
எ.அ.பாலா,
கொஞ்ச நாளா ஊர்ல இல்லை. வலைப்பதிவு பக்கமும் வர முடியவில்லை. இன்று வாசித்த ஒரு பதிவுக்கு பின்னூட்டம் இட (அட ...அனானியாத் தான்) எண்ணி எழுதியது நீண்டு விட்டதால், தங்களுக்கு அனுப்புகிறேன். பதிவாக இடுவீர்கள் என்று நம்புகிறேன். யோசித்துப் பார்த்தால் குறிப்பிட்ட அப்பதிவில் பின்னூட்டுவதை விட (ஜால்ரா காதைப் பிளப்பதால்) தாங்கள் பதிவாக பிரசுரித்தால் பெட்டர் என நினைக்கிறேன். அப்புறம் உங்கள் இஷ்டம்.
கி.அ.அ.அனானி

பி.கு: எந்தப் பதிவை குறிப்பிடுகிறேன் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு டிசம்பர் மாதக் கச்சேரிகளுக்கு பாலா இலவச டிக்கெட் வழங்குவார் ;-)

***************************
'இதில் என்ன இருக்கிறது' என்பதாலும், "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பரந்த நோக்கிலும் கி.அ.அ.அனானியின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன் :)
இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு கி.அ.அ.அ. அவர்களையே பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் !!! கி.அ.அ.அ மேட்டர் பதிவாக கீழே !
எ.அ.பாலா
**********************

"எங்கள் வீட்டில் தேங்காய் குழம்பு" இப்படி சொன்னவளிடம் எதிர் வீட்டுக்காரி " எங்கள் வீட்டில்
யாருக்குமே தேங்காய் ஆகாது..நாங்கள் தேங்காயே வாங்குவதில்லை " சொல்லும் போதே மனதுக்குள்
தேங்காயை துறுவு துறுவென்று துறுவி தேங்காய் வாங்க வக்கில்லாத அகங்காரத்தை சேர்த்து மனதுக்குள் போட்டு மென்று அரைத்த படி கடவாயில் தேங்காய் நினைப்பின் எச்சில் ஊற சொல்வாளாம். அடுத்த
வீட்டுக்காரியின் பொறாமை பற்றி இந்த மாதிரியாக வர்ணித்திருப்பார் ஒரு எழுத்தாளர்...தமிழ்
கதையில்தான்...இப்படி இருக்கிறது ஒரு வலைப்பதிவரின் ஆதங்கம்....

விஷயம் ஒன்றுமில்லை....டிசம்பர் கச்சேரிகளில் தமிழில் பாடுவதில்லையாம்...பாடும் ஒரு
குறிப்பிட்ட சாதி பொண்கள்...!!!!????

இந்த மாதிரி அதிகம் (வெட்டி) உணர்ச்சி வசப்படுபவர்களுக்கு சில யோசனைகள்

முதலாவதாக இந்த சாதிக்காரர்கள் மட்டும் ஏன் பாட வேண்டும்...விருப்பமுள்ளவர் அனைவரும் தமிழில் பாடி தமிழ் வளர்க்கலாம்...

இரண்டாவதாக இப்படி தமிழல்லாத குறிப்பிட்ட மொழியில் பாடி ( தமிழ் வளர்க்காத ) கச்சேரிகளை புறக்கணிக்கலாம்

மூன்றாவதாக தமிழில் பாடுபவர்களை ஊக்குவிக்க ஏதாவது உபயோகமாக செய்யலாம்..

நாங்காவதாக எனக்கு பறை, தமுக்கு அடிக்கத் தெரியும் என்று பீற்றுவதை விட்டு விட்டு அரங்கேற்றம் செய்து தமிழ் பாரம்பரிய கலைகளை மக்களிடம் எடுத்து செல்லலாம்.

ஐந்தாவதாக தமிழில் மட்டுமே பாடி கச்சேரி செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசை மானியம் வழங்கச் சொல்லி பரிந்துரையாவது செய்யலாம்.

இதெல்லாம் விட்டுவிட்டு எந்த ஒரு குறிப்பிட்ட சாதியினரையும் இழிவாக பேசி கூப்பாடு போடுவதாலெல்லாம் வலையுலகில் அரிப்பெடுத்து அலையும் சிலருக்கு சுகமாய் சொரிந்து விட உதவலாம்...ஆனால் இதனாலெல்லாம் தமிழ் வளர்ந்து விடாது...அரிப்பை சொரியும் போது சுகமாய் இருக்கும்...ஆனால் சொரிந்து சொரிந்து புண்ணாகுமே தவிர சொரிவது அரிப்புக்கு மருந்தாகுமா????

இவர்களே சொல்வது போல பட்டுப் புடவை சரசரக்க , போண்டா தின்பதற்காகவே ஒரு சில மாமிகள் மட்டுமே போய் புரியாமல் கேட்கும் சங்கீதத்தின் மேல் இவர்களுக்கு ஏன் இத்தனை ஆற்றாமை???அங்கலாய்ப்பு???? இப்படி சிலர் பாடுவதும் கேட்பதும் எந்தவிதத்தில் தமிழ் வளராமல் தடுத்துவிட்டது....இத்தனைக்கும் பாடுபவர்கள்... அனைவரும் வாரீர்...ஆதரவு தாரீர் என்றெல்லாம் இவர்களைப் போய் கேட்டதாகக் கூட தெரியவில்லை...அப்படிக் கேட்டாலும் தமிழில் பாடாதவர்களுக்கு ஆதரவில்லை என தெள்ளத்தெளிவாக சொல்லி விடலாம்.இதைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதும் புத்தகங்களையும் புறக்கணித்து விடுங்கள்..அவர்களும் இதனால் சந்தாதாரர்கள் குறைந்தால் அதன் மூலம் பாடம் கற்று இந்த உதவாக்கரை கச்சேரிகளைப் பற்றி எழுதுவதை விட்டு விடுவார்கள்.

எனவே ஜென்டில்மேன்...மனதுக்குள் தேங்காய் தின்று கொண்டு..... தேங்காய் தின்னும் அடுத்தவனை பார்த்து கறுவுவதை விட்டு விட்டு..உண்மையில் தேங்காய் வாங்கித் தின்ன முயலுங்கள்....இதாவது தேவலை...இவர்களுக்கு பின்னூட்ட ஜால்ரா தட்டுபவர்களின் நிலைமை இன்னும் பரிதாபம்....தேங்காய் என்றால் என்ன என்று கூட தெரியாது...ஆனால் இவர்களுக்கு தேங்காய் பிடிக்காது.....கொடுமையடா சாமி????????

இந்த வலைப்பதிவரின் நேர்மைக்கும் மேதமைக்கும் சில உதாரணங்கள்...பின்னூட்டத்தில் சங்கீதம் பற்றி தமிழ் பற்றி உண்மை அக்கறையுடன் பேசிய எவருக்கும் இவர் பதில் சொல்லியிருக்க மாட்டார்....சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்வது (தமிழ்) பழமொழி....அதைத்தவிர மற்ற அனைவருக்கும் வளைத்து வளைத்து பதில் பின்னூட்டம் கொடுத்திருப்பார்....

தலைப்பை மாற்றி வைத்தெல்லாம் நேர்மை பறை சாற்ற முடியாது....குறிப்பிட்ட ஜாதியத்தை திட்டுகிறேன் என்று குறிப்பிட்ட ஜாதியை திட்டும் மொள்ளமாரித்தனத்தை இதனாலெல்லாம் மூடி மறைக்கமுடியாது....Keep the title of your post as you wish...and blame and curse as much as you can.....This is a Free world, after all.

கி.அ.அ.அனானி
*************************

*** 267 ***

Monday, December 04, 2006

பெரிய திருமொழிப் பாசுரங்கள் தொகுப்பு - PTM1

திருமங்கை மன்னன் - திருவல்லிக்கேணி
Photobucket - Video and Image Hosting

949@..
ஆவியே. அமுதே. எனநினைந்துருகி* அவரவர் பணைமுலைதுணையா*
பாவியேன் உணராது எத்தனைபகலும்* பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்*
தூவிசேரன்னம் துணையொடும்புணரும்* சூழ்புனல் குடந்தையே தொழுது*
என் நாவினாலுய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2) 1.1.2


பாவியான யான், "ஆவியே, அமுதே" என்றெல்லாம் பிதற்றிய வண்ணம், சகலவிதமான சிற்றின்ப எண்ணங்களுடன் பெண்டிர் பின் அலைந்து, நாட்களை வீணாக்கி, அறிவின்மையால் என் வாழ்வைத் தொலைத்தேன் ! அப்படிப்பட்ட நான், தன் துணையோடு மட்டுமே சேரும் அன்னங்கள் வாழும் வற்றாத நீர்ச்சுனைகள் மிக்க திருக்குடந்தைப் பெருமானை அடைந்து, நாராயணா என்னும் திருநாமத்தைச் சொல்லி, உய்வு பெறும் வழியை, அவன் அருளால் கண்டு கொண்டேனே !

இப்பாசுரத்தில் "தூவிசேரன்னம் துணையொடும்புணரும்" என்று ஆழ்வார் பாடும்போது, பெருமாளை விட்டு என்றும் பிரியாமல் அவர் நெஞ்சில் குடியிருக்கும் பிராட்டியின் தன்மையைக் குறிப்பிடுவதாக பெரியோர் கூறுவர்.
********************************

953@..
எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம்* எனக்கரசு என்னுடைவாணாள்*
அம்பினால் அரக்கர் வெருக்கொளநெருக்கி* அவருயிர்செகுத்த எம்அண்ணல்*
வம்புலாம்சோலைமாமதிள்* தஞ்சை மாமணிக்கோயிலேவணங்கி*
நம்பிகாள். உய்யநான் கண்டு கொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2) 1.1.6


ஆழ்வார், பக்திப் பேருவகையில், பெருமான் மேல் கொண்ட பேரன்பில் அருளிய இப்பாசுரத்திற்கு, அந்த உணர்வுகள் நீர்த்துப் போகாத வண்ணம் பொருள் கூறுவது சிரமமே ! முயற்சிக்கிறேன் !

என்னுடைய பெருமான், என்னுடைய தந்தை, என் உறவினன், என்னை ஆள்பவன், என் உயிரானவன், எல்லா நேரங்களிலும், எல்லா வகையிலும் என்னை ரட்சிப்பவன், அம்பால் அசுரர்களை மாய்த்த என் கிலேச நாசன் என்றெல்லாம் சதா சர்வ காலமும் அவ்வண்ணலையே சிந்தையில் நிறுத்தியிருக்கும் கற்றறிந்த அடியார்களே ! அழகிய சோலைகளும், உயர்ந்த மதில்களும் சூழ்ந்த தஞ்சையின் மாமணிக்கோயிலில் எழுந்தருளியுள்ள அப்பெருமானைத் தொழுது, நாராயணா என்னும் திருநாமத்தைச் சொல்லி, உய்வு பெறும் வழியை, அவன் அருளால் கண்டு கொண்டேனே !
********************************

966@
ஓதியாயிரநாமங்கள் உணர்ந்தவர்க்கு* உறுதுயரடையாமல்*
ஏதமின்றி நின்றருளும் நம்பெருந்தகை* இருந்தநல் இமயத்து*
தாதுமல்கிய பிண்டிவிண்டு அலர்கின்ற* தழல்புரை எழில்நோக்கி*
பேதைவண்டுகள் எரியென வெருவரு* பிரிதிசென்றடை நெஞ்சே. 1.2.9


பரமபுருஷனான எம்பெருமான், அவனது ஆயிரம் நாமங்களை பொருள் உணர்ந்து ஓதிய அடியார்களின் (முற்பிறவியின்)பாவங்களை களைந்து, துன்பம் எதுவும் அவரை நெருங்காதபடி ரட்சித்து, அவ்வடியார்கள் தன்னை வந்தடைவதற்கு அருள் செய்யும் பேரருளாளன். தாதுக்கள் நிறைந்த, எழில் மிக்க, சிவந்த அசோக மலர்களை, தீப்பந்துகள் என்று பேதமையில் எண்ணி அஞ்சி விலகும் வண்டுகள் வாழும், இமயத்துச் சாரலில் அமைந்த, திருப்பிரிதியின் நாயகனான அப்பிரானை வணங்கி, அவனைப் பற்றிடு என் நெஞ்சமே !
********************************

978@..
ஏனமுனாகி இருநிலமிடந்து* அன்றிணையடி இமையவர்வணங்க*
தானவனாகம் தரணியில்புரளத்* தடஞ்சிலைகுனித்த என்தலைவன்*
தேனமர்சோலைக் கற்பகம்பயந்த* தெய்வநன் நறுமலர்க்கொணர்ந்து*
வானவர்வணங்கும் கங்கையின்கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.1


ஒரு சமயம், வராஹ அவதாரமெடுத்து கடலின் ஆழத்தில் சிறை வைக்கப்பட்ட பூவுலகை மீட்டுக் காத்தவனும், பின் ஸ்ரீராமனாக அவதரித்து, வானவர்கள் எல்லாம் வணங்கிப் போற்றும் வண்ணம், பலம் வாய்ந்த இராவணனையும் அசுர வம்சத்தையும் வில் கொண்டு மாய்த்தவனும் ஆவான் என் தலைவன். அந்த ஒப்பிலாத பெருமானே கங்கைக் கரையில் அமைந்த பத்ரிகாஷ்ரமத்தில் எழுந்தருளியிருக்கிறான். அப்புண்ணியத் தலத்தில், தேவலோகச் சோலைகளில் மலர்ந்து நறுமணம் வீசும், பூஜைக்கு உகந்த, அழகிய கற்பக மலர்களை வானவர்கள் பறித்து வந்து, அவன் திருவடியில் வைத்து வணங்குகின்றனர் !
*****************************

984@
வெந்திறல்களிறும் வேலைவாயமுதும்* விண்ணொடு விண்ணவர்க்கரசும்*
இந்திரற்கருளி எமக்குமீந்தருளும்* எந்தையெம்மடிகள் எம்பெருமான்*
அந்தரத்தமரர் அடியிணைவணங்க* ஆயிரமுகத்தினாலருளி*
மந்தரத்திழிந்த கங்கையின்கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.7


ஐராவதம் என்ற வெண்யானையையும், பாற்கடலை கடைந்தபோது உண்டான அமுதத்தையும், தேவலோகத்தையும், அதை அரசாளும் உரிமையையும் இந்திரனுக்கு அருளிய எம்பெருமானே, வேண்டுவனவற்றை எமக்கு உகந்து வழங்கும் என் அப்பன் ஆனவன் ! ஆயிரம் முகங்கள் கொண்டு அடியார்களுக்கும் வானவர்க்கும் அருள் வழங்கும் அக்கருணை வள்ளலே, இமயத்துச் சாரலில் உள்ள மந்திரமலையிலிருந்து பெருக்கெடுத்து ஓடி வரும் கங்கை நதிக் கரையில் அமைந்த பத்ரிகாஷ்ரமத்தில் எழுந்தருளியிருக்கிறான் !
*****************************
என்றென்றும் அன்புடன்
பாலா

*** 266 ***

Saturday, December 02, 2006

திவ்ய தேசம் 7 - திருக்கூடலூர்

Photobucket - Video and Image Hosting
இவ்வைணவ திவ்ய தேசம் திருவையாறிலிருந்து 12 கிமீ தொலைவில், தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. ஐயம்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து வடக்கே ஆறு கிமீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு, ஆடுதுறைப் பெருமாள் கோயில் மற்றும் சங்கம ஷேத்திரம் என்ற பெயர்களும் உண்டு.
...................மூலவர் தரிசனம்...................
Photobucket - Video and Image Hosting
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் மூலவர், வையம் காத்த பெருமாள், உய்யவந்தார் மற்றும் ஜகத்ரட்சகன் என்று அழைக்கப்படுகிறார். கையில் செங்கோல் ஏந்தி காட்சி தரும் உத்சவருக்கும் அதே திருநாமம் தான்! மூலவ மூர்த்தி சுயம்புவாகத் தோன்றியவர் என்பது விசேஷம். தாயாரின் திருநாமங்கள் பத்மாசினி மற்றும் புஷ்பவல்லி ஆகும்.
....................உத்சவ மூர்த்தி.................
Photobucket - Video and Image Hosting
தீர்த்தமும், விமானமும் முறையே சக்ர தீர்த்தம், சுத்தஸத்வ விமானம் என்று அறியப்படுகின்றன. இத்தலத்தின் தலவிருட்சம் பலா ஆகும். கோயிலுக்குள் இருக்கும் பலா மரத்தில் சுயம்புவாக திருச்சங்கின் வடிவம் உருவாகியிருப்பதைக் காணலாம்.
Photobucket - Video and Image Hosting
ஒரு முறை, நந்தக முனியும், தேவர்களும் இங்கு ஒன்று கூடி ஹிரண்யாக்ஷனின் கொடுமையிலிருந்து பூவுலகைக் காக்குமாறு, மகாவிஷ்ணுவை வணங்கித் தொழுத காரணத்தால், இந்த புண்ணியத் தலம் திருக்கூடலூர் என்ற பெயர் பெற்றது என்று தல புராணம் கூறுகிறது. அவர்களின் வேண்டுதலே, எம்பெருமான் வராஹ அவதாரம் எடுக்கக் காரணமானது !
....................நரஸிம்ம மூர்த்தி .....................
Photobucket - Video and Image Hosting
நந்தக முனிவரின் மகளான உஷய், தலப்பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்ததாகவும், அவள் மேல் மையல் கொண்ட சோழ மன்னன் ஒருவன் அவளை மணந்ததாகவும், அவனது அமைச்சர்களின் பொய்யான தகவல்களை நம்பி அவளை விட்டுப் பிரிந்ததாகவும், பின் பெருமாளே அவர்கள் மீண்டும் கூடி வாழக் காரணமாக இருந்ததாகவும், அதனாலேயே இத்தலம் 'கூடலூர்' என்ற பெயர் பெற்றதாகவும் மற்றொரு பழங்கதை சொல்கிறது.

................மணவாள மாமுனிகள்..............
Photobucket - Video and Image Hosting
காவிரி, இவ்விடத்தில் திருமாலை வணங்கி, பாப விமோசனம் பெற்று, இழந்த பொலிவை திரும்ப அடைந்ததாக ஓர் ஐதீகம் உண்டு. அம்பரீசன், திருமங்கையாழ்வார், பிரம்மன், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியோர் பெருமாளின் தரிசனம் பெற்று, அவரை வழிபட்ட புண்ணியத் தலமிது.
.......................சக்கரத்தாழ்வார்.................
Photobucket - Video and Image Hosting
இவ்வைணவ திருப்பதியை திருமங்கையாழ்வார், அவர் அருளிச் செய்த பெரிய திருமொழியில் உள்ள பத்து திருப்பாசுரங்களில் (1358-67) மங்களாசாசனம் செய்துள்ளார்.
**************************************
1358@..
தாம்* தம்பெருமையறியார்*
தூதுவேந்தர்க்காய* வேந்தர்ஊர்போல்*
காந்தள்விரல்* மென்கலை நன்மடவார்*
கூந்தல்கமழும்* கூடலூரே (5.2.1)
******************************
1359@
செறும்திண்* திமிலேறுடைய* பின்னை

பெறும்தண்கோலம்* பெற்றார்ஊர்ப்போல்*
நறுந்தன்தீம்* தேன்உண்டவண்டு*
குறிஞ்சிபாடும்* கூடலூரே (5.2.2)
********************************
1360@
பிள்ளைஉருவாய்த்* தயிருண்டு* அடியேன்

உள்ளம்புகுந்த * ஒருவரூர்போல்*
கள்ளநாரை* வயலுள்* கயல்மீன்

கொள்ளைகொள்ளும்* கூடலூரே (5.2.3)

என் அண்ணல், கோகுலத்து பாலகனாய், வாயிலிருந்து ஒழுக ஒழுக தயிரை உண்டு, என் உள்ளம் புகுந்த கள்வன் ! நாரைகள் வயல்களில் நின்றபடி காத்திருந்து, சூழ்ச்சியாக மீன்களை நீரிலிருந்து கவ்வியெடுக்கும் திருக்கூடலூரில் ஒப்பிலா அப்பிரானே எழுந்தருளியிருக்கிறான்.
********************************
1361@
கூற்றேருருவின்* குறளாய்* நிலம்நீர்

ஏற்றான்எந்தை* பெருமானூர்போல்*
சேற்றேருழுவர்* கோதைப் போதூண்*
கோல்தேன்முரலும்* கூடலூரே (5.2.4)


சிறிய வாமன வடிவினனாய் மாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, மூவுலகையும் இறைந்து பெற்றவன் என்னப்பன் ! குடியானவர் தங்கள் தலைப்பாகையில் சூடியுள்ள மலர்களின் தேனுண்டு, இனிமையாக ரீங்காரமிடும் வண்டுகள் நிறைந்த திருக்கூடலூரிலும் அப்பெருமானே தங்கி அருள் பாலிக்கிறான் !
********************************
1362@
தொண்டர்பரவச்* சுடர்சென்றணவ*
அண்டத்துஅமரும்* அடிகளூர்போல்*
வண்டலலையுள்* கெண்டைமிளிர*
கொண்டலதிரும்* கூடலூரே (5.2.5)


அண்டத்தை வியாபித்த பேருருவம் எடுத்த ஒளி மிக்க ஆதி பிரானை அடியார்கள் சூழ்ந்து போற்றி வணங்குகின்றனர் ! அவ்வண்ணலே, சூரிய ஒளி பட்டு மின்னும் மீன்கள், நீரின் மேற்பரப்பு அதிர,துள்ளி விளையாடும் சுனைகள் நிறைந்த திருக்கூடலூரில் கோயில் கொண்டுள்ளான்.
******************************
1363@
தக்கன்வேள்வி* தகர்த்ததலைவன்*
துக்கம் துடைத்த* துணைவரூர்போல்*
எக்கலிடு* ஞுண்மணல்மேல்* எங்கும்

கொக்கின் பழம்வீழ்* கூடலூரே (5.2.6)
**********************************
1364@
கருந்தண் கடலும்* மலையும் உலகும்*
அருந்தும் அடிகள்* அமரும்ஊர்போல்*
பெருந்தண் முல்லைப்* பிள்ளையோடி*
குருந்தம் தழுவும்* கூடலூரே (5.2.7)


கரிய, குளிர்ந்த கடல்களையும், மலைகளையும், உலகங்களையும், பிரளயத்தின் போது காக்க வேண்டி உண்ட பரந்தாமன், முல்லைக் கொடி வளர்ந்து பரவி, குருந்த மரங்களை தழுவி மறைத்து விடும் வனப்புடைய திருக்கூடலூரில், நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறான்.
*******************************
1365@
கலைவாழ்* பிணையோடு அணையும்* திருநீர்

மலைவாழ் எந்தை* மருவும்ஊர்போல்*
இலைதாழ் தெங்கின்* மேல்நின்று* இளநீர்க்

குலைதாழ்கிடங்கின்* கூடலூரே (5.2.8)
************************************
1366@
பெருகு காதல் அடியேன்* உள்ளம்-
உருகப் புகுந்த* ஒருவரூர்போல்*
அருகுகைதைமலர* கெண்டை

குருகென்றஞ்சும்* கூடலூரே (5.2.9)

என் ஐயனை அடைய வேண்டும் என்கிற பேரவா நாளுக்கு நாள் பெருக, என் உள்ளமானது சதா சர்வ காலமும் அவன் ஒருவனையே எண்ணி உருகுகிறது ! கரைக்கு அருகில் வளர்ந்திருக்கும் தாழை மலர்களை, தம்மைக் கொத்த வந்த நாரைகள் என்றெண்ணி அஞ்சும் மீன்கள் வாழும் தடாகங்கள் நிறைந்த திருக்கூடலூரில், கருணை மிக்க அவ்வண்ணல் எழுந்தருளி உள்ளான்.
********************************
1367@..
காவிப் பெருநீர் வண்ணன்* கண்ணன்

மேவித்திகழும்* கூடலூர்மேல்*
கோவைத் தமிழால்* கலியன் சொன்ன*
பாவைப் பாடப்* பாவம் போமே (5.2.10)
******************************************
...............ஊர்த்வ புண்ட்ரம்..................
Photobucket - Video and Image Hosting
ஒரு சமயம், கொள்ளிடம் நதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில், இத்திருக்கோயில் மூழ்கி, விக்ரகங்கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், வெள்ளத்தில் மூழ்கிய விக்ரகங்கள் அருகில் உள்ள கீழ் வளத்தூர் என்ற ஊரைச் சேர்ந்த தீக்ஷிதர் ஒருவரின் கனவில் பார்த்த இடத்தில் தோண்டி எடுக்கப்பட்டதாகவும், பின்னர் அவ்வூரிலேயே 1741ல் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் தெரிய வருகிறது. தற்போது நாம் காணும் (பாபனாசத்துக்கு அருகே பெருமாள் கோயில் என்ற கிராமத்தில் உள்ள) கோயிலை, ராணி மங்கம்மாள் கட்டியதாக (அல்லது புதுப்பித்ததாக) தெரிய வருகிறது.
Photobucket - Video and Image Hosting
கோயிலில், வரதராஜப் பெருமாள், ஆண்டாள் மற்றும் ஆழ்வார்களுக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. கோயிலுக்கு முன்னே உள்ள அழகான ராஜகோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது. கோயிலுக்கு உள்ளே இருக்கும் ஒரு மண்டபத்து தூண்களில் ராணி மங்கம்மா மற்றும் அவரது அமைச்சர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். நாலு கால பூஜை மரபு. வருடாந்திர பிரம்மோத்சவம் வைகாசித் திங்களில் விமரிசையாக நடைபெறுகிறது.

என்றென்றும் அன்புடன்
பாலா

புகைப்படங்கள் உதவி: ராமானுஜ தாஸர்கள் வலைத்தளம்

*** 265 ***

Thursday, November 30, 2006

கயர்லாஞ்சி பயங்கரம் - உருக்கும் தகவல்கள்

ஒரு தலித் குடும்பம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகம் பற்றிய என்னுடைய முந்தைய பதிவின் தொடர்ச்சியாக சில தகவல்களைத் தருகிறேன்.

உயர்த்தப்பட்ட சாதி ஆண் மிருகங்களின் வன்முறைக்கும், வன்புணர்வுக்கும் ஆளாகி கொடூரமாக கொல்லப்பட்ட அந்த ஏழைத் தாயின் பெயர் சுரேகா, வயது 44. அவரது மகளின் பெயர் பிரியங்கா, வயது 17. சித்திரவதை செய்யப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்ட மகன்களின் பெயர்கள் ரோஷன் (வயது 19) மற்றும் சுதீர் (வயது 21). குன்பி என்ற அந்த உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த 40 கயவர்கள், நால்வரும் தப்பித்து ஓடாமல் இருக்க, அவர்களின் கால் எலும்புகளை முறித்துள்ளனர். கொலை செய்யப்படுவதற்கு முன் சைக்கிள் செயின் மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

பய்யாலால் குடும்பத்தினர், மதம் மாறினால் தலித் என்பதால் சந்திக்க நேர்ந்த அவமானத்தையும் அவலத்தையும் பின்னுக்கு தள்ள முடியும் என்ற நம்பிக்கையில் பௌத்த மதத்தைத் தழுவியவர்கள். பிரியங்கா புத்திசாலி மாணவியாகத் திகழ்ந்து, பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர். பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த அவரது அண்ணன் ரோஷன் அக்கிராமத்திலேயே அதிகம் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அண்ணனான சுதீர் கண் பார்வையற்றவர். அவரையும் சாதி வெறி பிடித்த பாவிகள் விட்டு வைக்கவில்லை !

பய்யாலால் குடும்பத்தினர் தாக்கப்படக் கூடும் என்ற பயத்தில், அவர்களை கிராமத்தை விட்டு சென்று விடுமாறு எச்சரிக்க, கஜ்பியே (இவரது உறவினரான சித்தார்த், குன்பி சாதியினரால் ஒரு முறை கடுமையாகத் தாக்கப்பட்டபோது, காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாருக்கு பய்யாலால் குடும்பத்தினர் சாட்சிக் கையொப்பம் இட்டிருந்தனர் !) என்ற குடும்ப நண்பர், சம்பவ தினத்தன்று கயர்லாஞ்சிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பிரியங்கா தனது கைத்தொலைபேசியில் அவரை உதவிக்கு அழைத்துள்ளது தெரிய வந்தைருக்கிறது. அவர் வருவதற்குள் எல்லாமே முடிந்து விட்டது !

சம்பவ தினத்தன்று (29 செப்டம்பர் 2006) மாலையில், மின்சாரம் இல்லாத அவர்களது சிறுகுடிசையில், பிள்ளைகள் பாடம் படித்துக் கொண்டிருந்தனர். தாயார் சுரேகா உணவு தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது, குன்பி அரக்கர்கள் அடங்கிய வெறிக்கூட்டத்திற்கு தலைமை ஏற்று இந்த படுபாதக செயல் நடைபெறுவதற்கு காரணமாக இருந்தவன் பிரபாகர் மண்டேலிகர் என்பவன். அவனோடு செர்ந்து, தற்சமயம் கைது செய்யப்பட்டிருக்கும் 42 பேரும், தாங்கள் சம்பவம் நடந்த போது கிராமத்திலேயே இல்லை என்று சாதிக்கின்றனர். ஊரில் உள்ள மற்ற இரு தலித் குடும்பத்தினரும் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்ல மரண பயத்தில் மறுத்து வருகின்றனர் என்பது வேதனையான விஷயம். அரசு இயந்திரமும், காவல் துறையும், போஸ்ட்மார்ட்டம் செய்த அரசு டாக்டர்களும் குற்றவாளிகளுக்கு சாதகமாக இயங்கும்போது, அவர்கள் என்ன செய்வார்கள் பாவம் ???

தற்போது பய்யாலால் மட்டுமே நடந்த அராஜகத்திற்கு சாட்சியாக உள்ளார். ஆனால், அவர் முதல் குற்றவாளி என்று கை காட்டிய கிராமத்துத் தலைவரான உபஸ்ராவ் கன்டாடே இதுவரை கைது செய்யப்படாதது போலீசார் யார் பக்கம் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஆள் அரவமிக்க பொது இடத்தில் நடந்ததை கிராமத்தில் உள்ள ஒருவரும் பார்க்கவில்லை என்று சாதிப்பது விந்தையிலும் விந்தை ! முதல் மருத்துவ அறிக்கை கொலை செய்யப்பட்ட நால்வரும் கபாலத்தினுள் ஏற்பட்ட ரத்தப் பெருக்கினாலும் (intracranial haemorrhage), நரம்பு மண்டல அதிர்ச்சியாலும் (neurogenic shock) இறந்தனர் என்று கூறுகிறது. வன்புணர்வு பற்றி அறிக்கை எதுவும் பேசவில்லை ! போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர் தற்சமயம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர கிராமங்களிலும், அவ்வரசின் கிராம நிர்வாகத்திலும் புரையோடிப் போயிருக்கும் சாதீய உணர்வே, விசாரணையின் மெத்தனத்திற்கும், போக்கிற்கும் காரணம் என்பது நிதர்சனம் ! முதல் தகவல் அறிக்கை (FIR) சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குப் பின் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது ! அரசு உயர்மட்டத்திலிருந்து வரும் பிரஷர், பய்யாலாலுக்கு உரிய நீதி வழங்கப்படுவதை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது ! ஓய்வு பெற்ற நீதிபதி கோல்ஸே பாட்டில் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு, தன் முழு அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. தற்போது, வழக்கு விசாரணை CBI வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இப்பதிவின் முடிவில் உள்ள "தொடர்புடைய சுட்டி"யை கிளிக் செய்து, கயர்லாஞ்சியில் ஒரு தலித் குடும்பம் மீது ஏவி விடப்பட்ட வன்முறை பற்றிய சில படங்களை பார்க்கலாம். இளகிய மனமுடையவர்கள் தயவு செய்து பார்ப்பதை தவிர்த்து விடுங்கள் !

எ.அ.பாலா

### 264 ###

Tuesday, November 28, 2006

கிரிக்கெட் கூத்துகள்

தென்னாபிரிக்காவில் இந்திய அணி தழுவிய 2 தோல்விகளைத் தொடர்ந்து அரங்கேறியுள்ள கூத்துகளை பார்க்கலாம்.

1. BCCI-யின் தலைவரான பவார், தேர்வுக் குழுவின் தலைவரான வெங்க்சார்க்கரை தென்னாபிரிக்காவுக்கு விரைந்து சென்று, இந்திய மக்களின் அதிருப்தியையும், மன வருத்தத்தையும் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். இதை தொலைபேசியிலேயே சொல்லி விடலாம் என்ற விஷயத்தை அமைச்சரிடம் யாரும் தெரிவிக்கவில்லை போலிருக்கிறது :)

2. BCCI-யின் உப தலைவரான சஷாங்க் மனோகர், இரண்டாவது போட்டியில் இந்திய அணி ஆடிய விதத்தை பார்க்கும்போது, வீரர்களுக்கு ஒரு பைசா தரக் கூடாது என்றும், கிரிக்கெட் வாரியத்தை குற்றம் சொல்வது தவறு என்றும் காரசாரமாகப் பேசியுள்ளார் ! performance-க்கு ஏற்றபடி ஊதியம் வழங்குவது, கிரிக்கெட் வீரர்கள் பொறுப்பாக விளையாட வழி வகுக்கும் என்றும் கூறியுள்ளார்.

3. லோக் சபாவில் எம்.பி க்கள் எகிறி எகிறி குதித்ததைப் பற்றி சென்ற பதிவில் எழுதியிருந்தேன் ! அதற்கு, தைரியமாக இருவர் எதிர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சஷாங்க் மனோகர், "கிரிக்கெட் தொடர்புடைய விஷயங்கள் குறித்துப் பேசுவதைத் தவிர்த்து, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேறு எந்த வேலையும் இல்லை போலிருக்கிறது" என்றும், கிரெக் சாப்பல், "நான் ஆச்சரியப்படவில்லை ! இம்மாதிரி என்னை குறை கூறுவதற்குத் தான் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது" என்றும் இரண்டு போடாக போட்டார்கள் ! அவைத்தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, "எம்.பி க்களின் பணி என்ன என்று யாரும் எங்களுக்கு லெக்சர் தர வேண்டிய அவசியமில்லை" என்று கூறினார். கடுப்பான நமது மேதகு உறுப்பினர்கள், சாப்பல் மீது உரிமை மீறல் தீர்மானம் கூட கொண்டு வர முடியும் என்று பயம் காட்டியுள்ளார்கள். ஒன்று புரியவில்லை. இவர்கள் சாப்பலைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் இவர்களை யாரும் விமர்சிக்கக் கூடாது ! நாட்டை கட்டிக் காப்பவர்களிடமே சகிப்புத் தன்மை இல்லையென்றால், எப்படி பாமர மக்களிடம் எதிர்பார்க்க முடியும் ? அவர்கள் தொடப்பம், செருப்பு, முட்டை ஆகியவற்றை நாடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை ;-)

4. கல்கத்தா ரசிக வெறியர்கள், கிரெக் சாப்பலின் உருவ பொம்மையை எரித்தும், சவுரவ் கங்குலியை அணியில் சேர்க்க வேண்டும்மென்று கோஷம் எழுப்பியும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர் ! இதில் வியப்பொன்றும் இல்லை எனலாம் ! அலகாபாத்தில் உள்ள மகமத் கை·பின் இல்லம் தாக்கப்பட்டுள்ளது. சந்தடி சாக்கில், கம்யூனிஸ்ட்கள் சவுரவ் கங்குலியை அணியில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி குளிர் காய்ந்துள்ளனர். அவர்கள் குணம் தெரிந்தது தானே :)

5. கேப்டன் டிராவிட் காயமடைந்து, நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகளில் ஆட இயலாத சூழலில், VVS லஷ்மண் தென்னாபிரிக்கா செல்ல இருக்கிறார். ஒரு மாதத்திற்கு முன்பு வெங்க்சார்க்கர், லஷ்மணை ஒரு நாள் போட்டிகளுக்கான அணியில் சேர்க்காததற்கு, அவர் Fitness (இல்லாமல் இருப்பது) தான் காரணம் என்று கூறியது ஏனோ நினைவுக்கு வந்து தொலைக்கிறது ;)))

இந்த கூத்துகளுக்கு நடுவில், சரத் பவாரும் டிராவிட்டும் நடந்து கொள்ளும் விதம் பாராட்டத் தக்கது. பவார், கிரெக் சாப்பலை நீக்குவதோ, அணியின் செயல்பாட்டில் தலையிடுவதோ சாத்தியமில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். அமைதியின் சொரூபமான நமது கேப்டன் டிராவிட், "என் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றி நான் கவலைப்பட இயலாது (அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் அணி வீரர்களே சொதப்புகிறார்கள் என்பது வேறு விஷயம்:)) யாரையும், கிரிக்கெட் பற்றி பேசாமல் இருக்கும்படி நான் கூற முடியாது. விமர்சிப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருப்பது போலவே, அதற்கு பதில் கூறாமல் இருக்க எனக்கும் உரிமையுள்ளது" என்று மெச்சூரிட்டி தெறிக்கப் பேசியுள்ளார் !!!

As Groucho Marx once said, "He may talk like an idiot. He may look like an idiot. But, don't let that fool you. He really is an idiot !"
நான் இங்கு டிராவிட்டைப் பற்றிப் பேசவில்லை, என்னைப் பற்றியும் அல்ல :)

எ.அ.பாலா

*** 263 ***

Saturday, November 25, 2006

மனதை உறைய வைக்கும் பயங்கரம் - தலித்துகள் மீது

ஒரு தலித் குடும்பம் மீது ஏவி விடப்பட்ட, அதிர்ச்சிக்குள்ளாக்கும் இந்த அராஜக வன்முறை குறித்து குமுதத்தில் வாசித்தேன். மனதை மிகவும் பாதித்தது !

மகாராட்டிர மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் கயர் லாஞ்சி. அங்கே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பய்யாலால் குடும்பத்தினர் தங்களுக்குச் சொந்தமான சிறிய நிலத்தில் விவசாயம் செய்து கௌரவத்துடன் வாழ்ந்து வந்தனர். ஆனாலும் பெரும்பான்மையாக இருந்த 'உயர்த்தப்பட்ட' சாதியைச் சேர்ந்த கயவர்கள் அக்குடும்பத்தை பல விதங்களிலும் கொடுமைக்கு உட்படுத்தி வந்தார்கள். பய்யாலாலுக்கு ஆதரவாக சித்தார்த் என்பவர் உதவி செய்ய , அந்த நபர் ஒரு நாள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டிருக்கிறார். அப்போது விதைக்கப்பட்டது, அக்குடும்பத்தினர் சந்திக்கவிருந்த பயங்கரத்தின் விதை !

காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாருக்கு பய்யாலால் குடும்பத்தினர் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்தது தான் வன்கொடுமையின் உச்சம் !! பய்யாலால் கண் முன்னே அவருடைய மனைவி, மகள் மற்றும் இரண்டு மகன்களை ஊரைச் சேர்ந்த 'உயர்த்தப்பட்ட' சாதியைச் சேர்ந்த 'தெரு நாய்கள்' தெருவில் இழுத்துச் சென்று, நிர்வாணமாக்கி பயங்கரமாக அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். அண்ணனையும், தங்கையையும் எல்லார் முன்பும் உடலுறவு கொள்ளச் சொல்லி நிர்பந்தம் செய்திருக்கிறார்கள் ! அவர்கள் மறுக்க, பெண்களின் அந்தரங்க உறுப்புகளில் குச்சிகளால் துளைத்துச் சித்திரவதை செய்திருக்கிறார்கள்.

பிறகு, ஏறக்குறைய அந்த கிராமத்திலிருந்த அத்தனை 'உயர்த்தப்பட்ட' சாதி ஆண் மிருகங்களும் தாயையும், மகளையும் பகிரங்கமாக வன்புணர்ச்சி செய்து, நால்வரையும் அடித்தே கொன்று போட்டார்கள். உடல்களை ஒரு கால்வாயில் போட்டு விட்டு ஊரே கை கழுவியிருக்கிறது ! இத்தனை கொடூரங்களும் காட்டுமிராண்டி கூட்டத்தின் வெறியாட்டத்திற்கு குலை நடுங்கிப் போய் ஓளிந்திருந்த பய்யாலாலின் கண் முன்னே நடந்திருக்கிறது. காவல் துறையும் பெரிதாக நடவடிக்கை ஒன்றும் எடுக்கவில்லை.

ஊடகங்கள் மெதுவாக விழித்துக் கொண்டு இந்த அநியாய, அக்கிரம சம்பவத்தை ரிப்போர்ட் செய்த பிறகு, அங்கு பெரிய போராட்டம் வெடித்திருக்கிறது. ஆனாலும், பல குற்றவாளிகள் தப்பித்திருக்கிறார்கள். இன்று தனிமரமாய் நிற்கும் பரிதாபத்துக்குரிய பய்யாலால், சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் நம் நாட்டில் நிலவும் காட்டுமிராண்டித்தனமான சாதி வெறிக்கு உதாரணமாய் கதறுகிறார் !

கீழ்வெண்மணிக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. உலக அரங்கில் நம்மை தலை குனிய வைத்திருக்கும் சம்பவம் இது.

நன்றி: குமுதம்

டெயில் பீஸ்: இது போன்ற, தாழ்த்தப்பட்டவர் மீதான, தினம் ஓர் அராஜக வன்கொடுமை, நாட்டின் ஏதோ ஒரு மூலையில் நடந்த வண்ணம் இருக்கிறது ! நாமும் செய்தியை வாசித்து விட்டு, உருப்படியாக ஒன்றும் செய்ய முடியாமல், சாதி/மதம் குறித்து தினம் இணையத்தில், பயனில்லாத வகையில், தர்க்கம் பண்ணிக் கொண்டிருக்கிறோம் என்பது வேதனையான விஷயம் ! தீண்டாமை நிலவும் ஏதாவது ஒரு தமிழ்நாட்டு கிராமத்தில் விழிப்புணர்வு ஏற்படவும், தாழ்த்தப்பட்டவர் நல்வாழ்வு பெறவும், கூட்டாக நாம் பங்களிக்க முடியும் என்று தோன்றுகிறது.. எவ்வாறு செய்யலாம் என்று நீங்கள் கூறுங்கள் !!!

எ.அ. பாலா

*** 262 ***

Friday, November 24, 2006

இந்திய கிரிக்கெட் அணியின் அடிமைத் தன்னிலை !

டர்பனில் நடந்த இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியை கண்டு "களித்த" இந்திய வம்சாவழி ரசிகர் ஒருவர் "இந்திய அணி இயங்கிய விதமும், அதன் ஆட்டமும், அடிமைகள் தங்கள் முதலாளிகளுக்கு தலை வணங்கி நடப்பது போலவே இருந்தது" என்று படு காட்டமாக விமர்சித்தார் ! மற்றொரு ரசிகை, "நமது வீரர்கள், பலமற்ற சாதுவான கோழைச் சிறுநாய்கள் (sheepish lapdogs) போல், தங்களை தென்னாபிரிக்க அணி மிரட்டிப் பணிய வைக்க ஏதுவாக நடந்து கொண்டனர்" என்று கடுப்பியிருக்கிறார் !

கொழுவி பாணியில் சொல்ல வேண்டுமானால், "என்னை செருப்பால் அடியுங்கள், ஏனெனில் நான் புதனன்று இந்தியா-தென்னாபிரிக்கா ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்தேன்!" என்று தான் அடியேன் கூறுவேன் :)

டர்பனில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில், இந்தியா சந்தித்த அவலமான தோல்வியை டிவியில் காணும் அவலம் எனக்கு ஏற்பட்டது துரதிருஷ்டமே :( முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக அணி, ஜேக் காலிஸ் அடித்த சதத்தின் வலிமையால், 248 ரன்கள் எடுத்தது. ஆரம்பத்தில் நன்றாக பந்து வீசிய அகர்கார், தனது கடைசி இரண்டு ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து, எதிரணிக்கு தன்னாலான தொண்டாற்றினார் !

வெற்றி பெற 249 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய இந்தியா, 62-2 என்ற ஸ்கோர் வரை, ஓரளவு நம்பிக்கை தரும் வகையில் ஆடிக் கொண்டிருந்தது. முக்கியமாக, சச்சின் தனது பழைய பாணியில், கவனமும், aggression-ம் கலந்து சிறப்பாகவும், டிராவிட் 'சுவர்' போலவும், ஆடிக் கொண்டிருந்தனர். அடுத்த 3 பந்துகளில் ஆட்டம் திசை மாறியது. சச்சினும், டிராவிட்டும் இரண்டு அருமையான பந்துகளுக்கு ஆட்டமிழந்தனர். ஸ்கோர் 62-4.

தென்னாபிரிக்க அணி லேசான ரத்த வாடையை முகர்ந்து விட்டது ! அதற்குப்பின், பெவிலியனை நோக்கிய (சவ) ஊர்வலம் தொடங்கியது ! தென்னாபிரிக்காவின் நெஞ்சளவு மற்றும் வெளி நோக்கி வீசப்பட்ட வேகப்பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல், திருவாளர்கள் சுரேஷ் ரயினா (நயினாவுக்கு நிறைய வாய்ப்பு கொடுத்தாகி விட்டது!), பீம பலம் வாய்ந்த தோனி, மோ(சோ)ங்கியா மற்றும் நமது பந்து வீச்சாளர்கள் கிடுகிடுவென தங்கள் விக்கெட்டுக்களை பறி கொடுத்தனர் !

ஒரு கட்டத்தில், இந்திய அணி 28 பந்துகளில், 2 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்ததை வைத்துப் பார்க்கும்போது, நமது அணி வீரர்கள் எவ்வளவு மன உறுதி, சூடு, சொரணை மிக்கவர்கள் என்பதை நாம் கண்டு கொள்ளலாம் ! அணியில் மூன்று வீரர்களே ஈரிலக்க ரன்கள் (சச்சின் 35 ரன்கள்) எடுத்தனர். இந்தியா 91 ரன்களுக்கு (29.1 ஓவர்களில்) சுருண்டது, வெட்கக்கேடு போல் தோன்றினாலும், பூரண சரணாகதித் தத்துவத்தை எனக்கு புரிய வைத்ததற்கு இந்திய கிரிக்கெட் அணிக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் !

முன்பு நான் 2002-இல், இந்தியா-நியூஸிலாந்து போட்டிகளுக்குப் பின் ரீடி·ப் இணைய தளத்தில் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது, நான்கு வருடங்களுக்குப் பின்னும் மாறாமல் இருப்பது வேதனையான விஷயம். அக்கடிததில்,"Losing is a part of every sport, but the manner in which our "star" (sponsor created status for many in our team !) studded team lost to a lowly NZ team was very mortifying, to say the least, to our National Spirit." என்று கூறியிருந்தேன். நானும் திருந்தாமல், இன்னும் நம்பிக்கையோடு இந்தியா ஆடும் கிரிக்கெட் ஆட்டங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பது இன்னொரு வேதனையான விஷயம் !

இன்று வரையில், சச்சின், டிராவிட் தவிர்த்து, வேகப்பந்து வீச்சுக்கு உதவும் bouncy ஆடுகளங்களில் தைரியமாக நின்று திறனுடன் விளையாட வல்ல வீரர்கள் உருவாகவில்லை என்பதற்குக் காரணம், இந்தியாவில் காணப்படும் பயனற்ற, Batsmen's Paradise என்றழைக்க வல்ல ஆடுகளங்களே என்பதை அனைவரும் அறிந்திருந்தும், பணத்தில் கொழிக்கும், அரசியல் வகை குடுமிப்பிடி சண்டைகளுக்கு பேர் போன, கேடு கெட்ட BCCI, நாடு முழுதும் நல்ல ஆடுகளங்களை அமைக்க, உருப்படியாக எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. கோபத்தில், மேலே உள்ளது பெரிய வாக்கியமாக அமைந்து விட்டது !

இத்தோல்வியின் எதிரொலியை பாராளுமன்றத்திலும் கேட்க முடிந்தது ! சில MP-க்கள் இந்தியத் தோல்வி ஏற்படுத்திய மன வருத்தத்திலும், கோபத்திலும், க்ரெக் சாப்பலை பயிற்சியாளர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று ஆவேசப்பட்டனர். சந்தித்து வரும் தொடர் தோல்விகளிலிருந்து இந்திய அணி விடுபடவேண்டி, BCCI-யின் தலைவரான சரத் பவார் என்னென்ன முயற்சிகள் எடுக்கவுள்ளார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று பிஜேபியின் மூத்த தலைவரான விஜய்குமார் மல்ஹோத்ரா கேட்டுக் கொண்டார் ! ரொம்ப முக்கியமான நாட்டுப் பிரச்சினை இல்லையா இது ??? அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் தரகர்கள் தலையீடு இல்லாமல் இருந்தாலே போதும், இந்திய கிரிக்கெட், சண்டை சச்சரவில்லாமல், முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு வசதியாக இருக்கும்.

இந்த தோல்விக்குப் பின்னும் டிராவிட் தனது அணி வீரர்களைக் காய்ச்சாமல், அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் ஒரு பேட்டியில் பேசியிருப்பதை பாராட்டலாம். மனச்சோர்வு அடைவதில் எந்தப் பயனும் இல்லை என்றும், இம்மாதிரி ஆடுகளங்களில் நின்று ஆடுவதற்கு அவசியமான உத்திகளை அணி வீரர்கள் கை கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார். ஞாயிற்றுக் கிழமை 'நம்ம' பயங்க என்ன செய்றாங்கன்னு பார்க்கலாம், என்ன இருந்தாலும், வாழ்க்கையில நம்மளுக்கும் நம்பிக்கை வேணும் இல்லயா :)))

என்றென்றும் அன்புடன்
பாலா

### 261 ***

Thursday, November 23, 2006

ஸ்ரீரங்கத்தில் ஈ.வே.ரா வுக்கு சிலை !

பெரியாரின் முழு உருவச்சிலை ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரத்திற்கு நேர் எதிரே, பல இந்து இயக்கங்களின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில், அமைக்கப்படவுள்ளது. இச்சிலை அமைப்பதற்கான தீர்மானம், 1973-இல் ஸ்ரீரங்கம் முனிசிபல் கவுன்சில் தலைவரான வெங்கடேஸ்வர தீக்ஷிதர் தலைமையில் நிறைவேற்றப்பட்டு, ஓர் அரசு ஆணை வாயிலாக 144 சதுர அடி ஸ்ரீரங்கம் காவல் நிலையம் அருகே ஒதுக்கப்பட்டது. பல வருடங்கள் விஷயம் கிடப்பில் இருந்தது. இதைத் தொடர்ந்து, தி.க தலைவர் வீரமணி, டிசம்பர் 1996-இல், சிலைப் பணிக்கான அடிக்கல் நாட்டினார். ஆனால், இந்து இயக்கங்களின் தொடர் எதிர்ப்பால், நிலத்தைத் தோண்டி சிலைக்கு அடித்தளம் அமைக்கும் பணி மே-2006இல் தடைப்பட்டது.

கடந்த சனிக்கிழமை, ஸ்ரீரங்கம் ஊராட்சி தி.கவினர், வீரமணியுடன் ஆலோசனை செய்து சிலையை நிறுவும் பணியைத் தொடங்கினர். ஒரு தற்காலிக மேடையமைத்து ஈ.வெ.ரா சிலையை அதன் மேல் வைத்துள்ளனர். சிலைக்கான நிரந்தர அடித்தளமும், மேடையும் இன்னும் அமைக்கப்படவில்லை ! திராவிட கழகத்தினர், சிலை அமைப்பதற்கான அனைத்துப் பணிகளும் ஈ.வெ.ரா வின் நினைவு தினமான டிசம்பர் 24க்குள் முடிக்கப்பட்டு, வீரமணி சிலையை திறந்து வைப்பார் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

பி.ஜே.பி-யின் மாநில பணிக்குழு உறுப்பினரான ராமகிருஷ்ணன், தீவிர நாத்திகரான ஈ.வெ.ராவின் சிலையை, உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கத்து ராஜகோபுரம் முன்பு நிறுவதின் மூலம், ஆத்திக இந்துக்களின் நம்பிக்கையை திகவினர் கொச்சைப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர், " 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கத்தில் ஆண்டு முழுதும் பல உத்சவங்கள் நடைபெறுகின்றன. இறை நம்பிக்கையாளர்களை மூடர்கள் என்று பேசிய ஈ.வே.ராவின் சிலையை இங்கு நிறுவதின் மூலம், திகவினர் ஆத்திகர்களின் உள்ளத்தை புண்படுத்தி விட்டனர்" என்று கூறியுள்ளார். சிலையை வேறு இடத்தில் அமைப்பதை இந்துக்கள் எதிர்க்கவில்லை (!) என்றும் ராமகிருஷ்ணன் தெளிவுபடுத்தியுள்ளார்.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

டெயில் பீஸ்: அரசு அனுமதி தந்து, ஒருவரின் சிலையை, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் ஓரிடத்தில் அமைப்பது பற்றி எந்த பிரச்சினையும் இல்லை. ஈ.வெ.ரா சிலையை குறிப்பிட்ட இடத்தில் வைப்பதால், ஸ்ரீரங்கநாதருக்கு எந்த களங்கமும் ஏற்படவும் போவதில்லை ! ஆத்திக அன்பர்கள் நம்மாழ்வாரின் கீழ்க்கண்ட இரு பாசுரங்களை நினைவில் கொண்டால், இவ்விஷயத்தை ஒரு பிரச்சினையாகவே எண்ண வாய்ப்பில்லை !
******************************
அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்

அவரவர் விதிவழி அடையநின்றனரே.

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்.
உளன் அலன் எனில் அலன் அவன் அருவமிவ்வருவுகள்
உளனென இலனென அவைகுணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஓழிவிலன் பரந்தே

****************************
சில வாரங்களுக்கு முன் ஈ.வெ.ரா சிலைக்கு சந்தனம் பூசி, மாலையிட்டு, பூஜை போட்டு அவருக்கு களங்கம் உண்டு பண்ணி விட்டார்கள் என்று ஒரு பிரச்சினை கிளம்பியது போல, மறுபடியும் இன்னொரு பிரச்சினை எழாமல் இருக்க வேண்டும். என்ன, அடுத்த தடவை, சிலை வைணவக் கோயிலுக்கு அருகில் இருப்பதால், விஷமிகள் சந்தனத்திற்கு பதிலாக நாமத்தை குழைத்துப் போட்டு, கலாட்டா செய்யாத வகையில், நிரந்தரமாக ஒரு காவலரை, சிலையின் பாதுகாப்புக்கு நியமித்தால் நல்லது ! அதனால், ஒரு சாரார் மீது குற்றம் சாட்டி சண்டை போடும் அவசியமும் ஏற்படாது !!!

எ.அ.பாலா

*** 260 ***

Saturday, November 18, 2006

மருத்துவ மாணவி கௌசல்யாவை சந்தித்தேன்

அன்பான வலைப்பதிவு நண்பர்களே,

இப்பதிவை சற்று சிரமம் எடுத்து முழுவதும் வாசிக்கும்படி, வாசகர்களாகிய உங்களுக்கு, முதலில் ஒரு வேண்டுகோள் !!!
கௌசல்யாவுக்கு கல்வி உதவி குறித்த எனது முந்தைய பதிவு உங்கள் பார்வைக்கு:

முதற்கண், கௌசல்யாவின் கல்விக்கு உதவித் தொகை வழங்கிய நண்பர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு வழியாக, முதலாண்டு தேர்வு முடிந்து, ஒரு நீண்ட விடுமுறைக்குப் பின், தனது இரண்டாம் வருட மருத்துவப் படிப்பைத் தொடர, சொந்த ஊரான அந்தியூரிலிருந்து கௌசல்யா சென்ற வாரம் சென்னை வந்து சேர்ந்தார். கடந்த 2 மாதங்களில் பல முறை அவரிடம் தொலைபேசியிருக்கிறேன். சென்னை வந்தவுடன் என்னை தொடர்பு கொண்டார்.

இன்று ஸ்டான்லி கல்லூரி விடுதிக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசி விட்டு, நண்பர்களிடம் திரட்டிய கல்வி நிதியிலிருந்து அவருக்கு வேண்டிய உதவித் தொகையை அளிக்கலாம் என்ற முடிவுடன் எனது நண்பன் சங்கருடன் கிளம்பினேன். சென்ற வருடம் கௌசல்யாவை டெக்கான் குரோனிகள் அலுவலகத்தில் சந்திக்கச் சென்றபோது உடன் வந்த பெருமழை, இன்றும் தன் வேலையைக் காட்டத் தொடங்கியது ! ஆனால், இது சிறுமழையே :)

கௌசல்யாவை சந்தித்துப் பேசினேன். சென்ற வருடம் பார்த்ததை விட, சற்று தைரியமாகத் தோன்றினார். ஒரு வருட நகர (விடுதி) வாழ்க்கை ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் வருடத் தேர்வில் வாங்கிய மதிப்பெண்கள் பற்றி வினவினேன். கூடப் படிக்கும் மாணவ/மாணவியர் பலரும் (இவரைப் போலவே) திறமைசாலிகள் என்பதால், competition தீவிரமாக இருப்பதாக அவர் கூறியது, பலரும் அறிந்தது தானே! பன்னிரெண்டாம் வகுப்பு வரை, ஒரு கிராமத்தில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற கௌசல்யா, முயற்சி எடுத்துப் படித்து, 70 மதிப்பெண்கள் பெற்றது மிகவும் பாராட்டுக்குரியது என்பது என் கருத்து. முதல் வருட மருத்துவப் படிப்பில் அவர் பயின்ற பாடங்கள், Anatomy, physiology மற்றும் Bio-chemistry ஆகியவை.

அவர் ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி பெற ஆவன செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவரது உயர் கல்விக்கு பல நல்ல உள்ளங்கள் மனமுவந்து உதவி செய்திருப்பதை எடுத்துக் கூறி, இரண்டாமாண்டில் இன்னும் சிறப்பாக படிக்க வேண்டும் என்று உங்கள் சார்பில் அறிவுரை கூறினேன் (நான் ஓர் அட்வைஸ் அண்ணாசாமி என்பது வேறு விஷயம்:)) மீண்டும், நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல !

கௌசல்யா நன்றாகப் படித்து வாழ்வில் முன்னுக்கு வர வேண்டும், வருவார் என்ற திடமான நம்பிக்கையும் உள்ளது. அவ்வப்போது தாய் தந்தையற்ற அவரை சந்தித்துப் பேசி ஊக்கமளித்தலும் அவசியம் என்று தோன்றுகிறது, செய்வேன் ! கௌசல்யாவின் கல்விக்கு வேண்டி இந்த வருடம் திரட்டப்பட்ட மொத்த உதவித் தொகை 105559 (பழைய பாக்கியையும் சேர்த்து). வரவுக் கணக்கை, உதவி செய்த நண்பர்களூக்கு ஏற்கனவே மடல் வழி அனுப்பி விட்டேன். இந்த நேரம், தமிழ்மணத்திற்கும், திண்ணைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

உதவிய நண்பர்கள் விவரம் பின் வருமாறு:
செந்தில் குமரன், ஹரிஹரன், மஞ்சூர் ராசா, டோண்டு, கணேஷ் (சேலம்) alias S.V.Ganesh, H.ரங்கராஜன், குழலி, சந்தோஷ், துளசி, முகமூடி, மோகன் அண்ணாமலை, அபுல் அப்சல், ராமச்சந்திரன், ராஜா.ரங்கா, ஸ்ரீகாந்த் மீனாட்சி, வெட்டிப்பயல் என்கிற பாலாஜி.

இது தவிர, பொதுவில் பெயர் வெளியிட அனுமதிக்காத 12 நண்பர்கள் மற்றும் ஓர் இஸ்லாமியச் சகோதரர்.

ஒவ்வொரு ஆண்டும், கௌசல்யாவுக்கான டியூஷன் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தி விடும். எனவே, விடுதிக்கான முழு ஆண்டு கட்டணமான ரூ.18000-க்கு (இத்தொகையிலிருந்து ஒவ்வொரு மாதத்திற்கான செலவை விடுதி நிர்வாகம் கழித்துக் கொள்ளும்) ஸ்டான்லி மாணவிகள் விடுதிக்கான வார்டன் பெயருக்கு ஒரு காசோலையும், கௌசல்யாவின் இதரச் செலவுகளுக்கு (புத்தகங்கள், உடை ...) அவர் பெயரில் ரூ.10000-க்கான காசோலையும் உங்கள் சார்பில் வழங்கினேன். "நீங்கள் கொடுத்ததே இந்த வருடத்திற்குப் போதுமானது சார்" என்று அப்பெண் மனநிறைவோடு கூறினாலும், ஏதேனும் தேவையிருந்தால் தயங்காமல் கேட்குமாறும், நன்றாகப் படிப்பது குறித்து மட்டும் யோசிக்குமாறும் கௌசல்யாவிடம் வலியுறுத்தியுள்ளேன்.

திரட்டிய தொகையில், வைப்பு நிதியாக (fixed deposit) வங்கியில் உள்ள ரூ.40000 மற்றும் கௌசல்யாவுக்கு அளித்த ரூ.28000 போக மீதமுள்ள தொகையில் இன்னும் சில ஏழை மாணவ/மாணவிகளுக்கு (இவர்கள் தந்த தகவல்களின் அடிப்படையில் நானும், ராம்கியும் சிலரைப் பற்றி விசாரித்து விட்டோம், இன்னும் சிலர் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது) உங்கள் அனுமதியுடன் உதவலாம் என்பது எங்கள் எண்ணம். நாம் கூட்டாக உதவி செய்த / செய்யப்போகிற மாணவ/மாணவிகளை ஊக்கப்படுத்தி அவர்கள் நன்றாகப் படிக்கிறார்கள் என்று உறுதி செய்வதும், உதவித் தொகையை உண்மையான தேவை இருப்பவர்களுக்கு பயன்படும் விதத்தில் செலவிடுவதும் எங்கள் கடமை என்று நம்புகிறோம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு வேண்டுகோள் வைக்கிறேன். கல்விக்கு உதவும் இம்முயற்சிக்கு தொடர்ந்து நீங்கள் தரும் பேராதரவு தான், எனக்கும், விரைவில் சம்சார சாகரத்தில் நீந்த இருக்கும் 'ரஜினி' ராம்கிக்கும் மிகுந்த ஊக்கத்தையும், உற்சாகத்தையும், மனநிறைவையும் தருகிறது. மீண்டும் உங்கள் அனைவருக்கும் உளமார நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

என்றென்றும் அன்புடன்
பாலா

***** 259 ******

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails